ராமநாதபுரம் மாவட்டம், ஆதம் நகரில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பெண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து ராமநாதபுரம் ரயில்வே போலீஸார் மற்றும் பஜார் போலீஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, ரயிலில் அடிபட்டு இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக சிதறிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து ரயில்வே போலீஸாரும், பஜார் மற்றும் கேணிக்கரை போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயிரிழந்த பெண் அணிந்திருந்த உடையை வைத்து உயிரிழந்தது ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி என்பதை தெரிந்துகொண்டனர்.

இந்த நிலையில், நேற்று ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் மேதலோடை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ராபர்ட் ஜெயக்குமார் என்பவர் அந்த தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் தன் மகள் ஃபெலிசியா மேக்டலின் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் மாலை மீண்டும் வீடு திரும்பவில்லை, என புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் அவரை அழைத்து இறந்த மாணவியின் உடலை காட்டியிருக்கின்றனர். அப்போது உயிரிழந்தது தன்னுடைய மகள்தான் என உறுதியாக தெரிந்தவுடன் கதறி அழுதிருக்கிறார்.
அந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலைசெய்து உடல் தண்டவாளத்தில் வீசப்பட்டதா? என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மாலையிலிருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் மாணவியின் உடல் மீது ஏறிச் சென்றதன் காரணமாகவே உடல்கள் பல துண்டுகளாக சிதறியும், சிதைந்தும் இருக்கலாம் என ரயில்வே போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.