
கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், வசூலிக்க முடியாத வாராக்கடனாக 10 லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, அதை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகள் வாயிலாக கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன் தொகையில் வசூலிக்க முடியாத மோசமான கடன் விகிதமானது 10,09,511 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வாராக் கடன் தொகையை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தொழிலதிபர்கள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு வங்கிகள் பெரியளவில் கடன் வழங்கி வருகின்றன. சில சமயங்களில் இந்த கடனில் ஒரு பகுதிகள் வசூலிக்க முடியாமல் போகின்றது.

அவர்களது சொத்துக்களை விற்று கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டாலும் அது முழுக்கடனையும் அடைக்க முடியாத நிலை சில சமயம் ஏற்படும். எனவே அப்போதும் குறிப்பிட்ட தொகை கடன் என்ற நிலையிலேயே இருக்கும். இது மீட்கமுடியாத வாராக்கடனாக மாறிவிடும்.
கடன் தொகைகள் திரும்ப வராததற்கு வங்கி அதிகாரிகள் காரணமாக இருப்பதற்கு முகாந்திரம் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் வாராக் கடன்களுக்கு காரணமான 3,312 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாராக்கடன் தாண்டி, வணிக வங்கிகள் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.1,32,036 கோடி வாராகடன்கள் உள்பட 6,59,596 கோடி கடன்களை மீட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
newstm.in