குருவிக்காரர் சமுதாயத்திற்க்கு பழங்குடி அந்தஸ்து : மசோதா நிறைவேற்றம்!

குருவிக்காரர் சமுதாயத்துக்கு தமிழ்நாட்டில் பழங்குடி அந்தஸ்தை அளிக்கும் மசோதா மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேறியது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் செந்தில் குமார், காங்கிரஸ் கட்சியின் வைத்தியலிங்கம், பாரதிய ஜனதா கட்சியின் நிஷிகாந்த் தூபே, மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சௌகதா ராய் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் இந்த மசோதா மீதான விவாதத்தில் இன்று பங்கேற்றனர். மாநில வாரியாக முடிவுகளை எடுக்காமல், பழங்குடி பட்டியலில் இணைக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றாக பரிசீலிக்கலாம் என அவர்கள் அறிவுறுத்தினார்.

குருவிக்காரர் சமுதாயத்தை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான மசோதா மீதான விவாதத்துக்கு பழங்குடியினர் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா பதில் அளித்தார். மசோதாவில் குருவிக்காரர் மற்றும் நரிக்குறவர் சமுதாயங்கள் தமிழ்நாடு மாநில பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் நேற்றே மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். நேற்று விவாதத்தை தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் ஜெயக்குமார், இந்த மசோதாவுக்கு முழுமனதாக ஆதரவு தெரிவித்தார்.

பழங்குடியினருக்கான சலுகைகள் எதுவும் நிறுத்தப்படக் கூடாது எனவும் நிறுத்தப்பட்டுள்ள சலுகைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதிமுக சார்பாக ஓ பி ரவீந்திரநாத் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோரும் மசோதாவுக்கு ஆதரவை பதிவுசெய்தனர்.

பழங்குடியினர் பட்டியலில் இடம்பெறாமல் உள்ள பழங்குடி சமுதாயங்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கும் பழங்குடி அந்தஸ்து அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குருவிக்காரன் என குறிப்பிடாமல் குருவிக்காரர் என குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சுப்பராயன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வெங்கடேசன் ஆகியோரும் நேற்றே மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு மக்களவை உறுப்பினர்களும் இந்த மசோதாவுக்கு தங்கள் ஆதரவை வலியுறுத்தினர்.

இத்தகைய சூழலில் மக்களவை ஒப்புதல் கிட்டியுள்ள நிலையில், இந்த மசோதா அடுத்ததாக மாநிலங்களவையின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம், பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர் சமுதாயத்தை சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை வைத்தார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை செப்டம்பர் மாதத்தில் ஒப்புதல் அளித்தது. அதை தொடர்ந்து மக்களவையில் தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் இந்த சமுதாயத்தை சேர்ப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவை ஒப்புதலை பெற்ற பிறகு, இந்த மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டமாகி, அரசாணை வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.