'நான் அவன் இல்லை' பட பாணியில்… கடவுள் கிருஷ்ணர் உடன் பெண் கல்யாணம் – ஏன் தெரியுமா?

இந்து கடவுள் கிருஷ்ணரின் பக்தரும், ராஜபுத்திர வம்சத்தின் இளவரசியாகவும் இருந்தவர் மீராபாய். 16ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த மீராபாய் கிருஷ்ணருக்கே வாழ்க்கை அர்ப்பணித்தவர். தமிழில் ஆண்டாள் போல் வடக்கில் மீராபாய் சுமார் 1330 துதிபாடல்களை இயற்றியுள்ளார். 

அவர் வாழ்ந்த இடம் தற்போது ராஜஸ்தான் மாநிலமாக உள்ள நிலையில், அதே ராஜஸ்தானில் தற்போது நவீன மீராபாய் ஒருவர் உருவெடுத்துள்ளார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா…? ஆம், ராஜஸ்தானில் முதுநிலை பட்டதாரியான பூஜா சிங் என்பவர், கிருஷ்ணரை திருமணம் செய்த நிகழ்வுதான் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

ஆனால், மீராபாய்க்கும், பூஜாவுக்குமான காரணங்கள் வேறு வேறு. மீராபாய் கிருஷ்ணரின் மேல் இருந்த நாட்டத்தால் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆனால், பூஜாவோ, திருமணத்திற்கு பின் தனது வாழ்க்கை சீரழிந்துவிடக்கூடாது என்பதற்காக கிருஷ்ணரை திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். 

“பல்வேறு காரணங்களுக்காக திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் சண்டைப்போட்டு பிரிவதை நான் பார்த்துள்ளேன். அதற்கு பின் அவர்களின் வாழ்க்கையே சீரழிந்துவிடும். இதில், பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவேதான், நான் தாக்கூர்ஜியை (கிருஷ்ணர்) திருமணம் செய்ய முடிவெடுத்தேன்” என தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள நர்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா சிங். 30 வயதான இவர், அரசியலில் முதுகலை பட்டம் வென்றவர். இவர் கடந்த டிச. 8ஆம் தேதி கிருஷ்ணருடன் திருமணம் செய்துள்ளார். இவரின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. பூஜாவின் தந்தைக்கு கிருஷ்ணர் உடனான திருமண நிகழ்வில் உடன்பாடு இல்லை. எனவே, அதில் எரிச்சலடைந்த அவர் அந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், பூஜா சிங்கின் தாயார், அவருக்கு முழுவதுமாக துணை நின்று திருமணத்தை செய்துவைத்துள்ளார். 

கிருஷ்ணரின் சிலை முன் அனைத்து பூஜை, சடங்குகளை செய்த பூஜா, 300 உறவினர்கள் மத்தியில் இந்து முறைப்படி திருமணத்தை மேற்கொண்டார். இதுபோன்ற திருமணத்திற்கு குடும்பத்தினரை சம்மதிக்கவைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றும், ஆனால், விடாப்பிடியாக இருந்து, தனது தாயாரின் சம்மதத்தை பெற்றதாக பூஜா கூறினார். 

இதுபோன்ற திருமணம் குறித்து கேள்விப்பட்ட பூஜா, பண்டிதர்கள் உடன் கலந்தாலோசித்து, இந்து சடங்களை முறையாக செய்து இந்த துளசி திருமணத்தை மேற்கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு அவரின் வீட்டில் உள்ள சிறிய கோயிலில் கிருஷ்ணர் வைக்கப்பட்டுள்ளார். தினமும், கிருஷ்ணருக்கு பூஜா, சடங்குகளை பூஜா செய்து வருகிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.