ஐதராபாத்,
38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடக்கும் ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஐதராபாத்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி முதல் நாளில் 5 விக்கெட்டுக்கு 256 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் தன்மே அகர்வால் 116 ரன்களுடனும், மிக்கில் ஜெய்ஸ்வால் 32 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 115 ஓவர்களில் 395 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தன்மே அகர்வால் 135 ரன்களும், மிக்கில் ஜெய்ஸ்வால் 137 ரன்களும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர் 5 விக்கெட்டும், எல்.விக்னேஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 35 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் திரட்டி அபாரமான தொடக்கம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் 87 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் என்.ஜெகதீசன் 116 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
சிக்கிமில் நடந்து வரும் பிளேட் பிரிவு ஆட்டம் ஒன்றில் மணிப்பூர்-சிக்கிம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த மணிப்பூர் 56.5 ஓவர்களில் 186 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய சிக்கிம் அணி 2-வது நாளில் 220 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மணிப்பூர் தரப்பில் 16 வயது வேகப்பந்து வீச்சாளர் பெய்ரோஜம் சிங் 9 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே 9 விக்கெட் சாய்த்த 4-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். 34 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய மணிப்பூர் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்தது.