புதுடில்லி : பெண்ணையாறு நதி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம் – கர்நாடகா இடையே நிலவி வரும் பிரச்னையை தீர்த்து வைக்க பெண்ணையாறு நதி நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை மூன்று மாதத்தில் அமைக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகாவில் உருவாகும் பெண்ணையாறு, தமிழகம் வழியே சென்று வங்க கடலில் கலக்கிறது. தமிழகத்தில் ஓடும் பெண்ணை ஆற்றுக்கு தென்பெண்ணை ஆறு என்று பெயர். கர்நாடகாவின் நந்தி மலையில் உற்பத்தி ஆகி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், கடலுார் வழியே பாய்ந்து கடலில் கலக்கிறது.
இந்த தென்பெண்ணை ஆற்றின் நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம் – கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவின் யார்கோல் கிராமம் அருகே, பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
கடந்த நவம்பரில் நடந்த விசாரணையின் போது, பெண்ணையாறு நதி நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு தரப்பில் ஆறு மாதம் அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மூன்று மாதங்களுக்குள் நதி நீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தை அமைக்கும்படி உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement