ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூரில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள்

சென்னை: நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்), அம்ருத் 2.0 திட்டம் மற்றும் மூலதன மானிய நிதியின் (CGF) கீழ் ரூ.4,194.66 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசின் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் திட்டம்) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, கீழ்க்கண்ட 3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசாணை எண்.176, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் 14.12.2022-ல் ரூ.4,194.66 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

> காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ரூ.4,187.84 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம், கீழக்கரை நகராட்சிகள், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிகள், ராமநாதபுரம், திருப்புலானி, பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், மண்டபம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 2,306 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, நெய்க்காரப்பட்டி, கீரனூர் பேரூராட்சிகள் ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1,422 ஊரகக் குடியிருப்புகளில் 3,19,192 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் 30.40 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம்.

> புது ஏரி கால்வாயில் ராமன்ஜிகண்டிகை கிராமத்திற்கு அருகில், 5 ஆழ்துளை கிணறுகளை நீராதாரமாகக் கொண்டு ரூ.3.64 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பூண்டி ஊராட்சி ஒன்றியம் அம்மம்பாக்கம் மற்றும் கூனிப்பாளையம் ஊராட்சிகளைச் சார்ந்த அம்மம்பாக்கம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 717 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் சுமார் 4,900 மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம்.

> மாமண்டூர் ஏரியில் 4 ஆழ்துளை கிணறுகளை நீராதாரமாகக் கொண்டு ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பூண்டி ஊராட்சி ஒன்றியம் மாமண்டூர் ஊராட்சியைச் சார்ந்த வேலகாபுரம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 522 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் சுமார் 4,050 மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம்.

இத்திட்டங்கள் நிறைவடையும்பொழுது நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளுக்கு 135 லிட்டர் வீதமும், பேரூராட்சிகளுக்கு 90 லிட்டர் வீதமும் மற்றும் ஊரக பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.