தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு தமிழக அரசு ஆதார் எண் அவசியம் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான பின்னணியில் அரசு நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதையும், போலி பயனாளர்களை கண்டறியவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் வாக்குறுதி
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெண்களுக்கு அரசு பேருந்து இலவசம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை திமுக மக்களிடம் வழங்கியது. மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி, பயிர்க்கடன்கள் தள்ளுபடி, தங்க நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், மின்சார துறையில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி திமுக அறிவித்த அனைத்து அரசு இலவச உதவிகளும் ஒரே பயனாளிகளுக்கு செல்வதை தடுக்கவும், போலி பயனாளர்களை கண்டறியவும், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மின்சார துறை அறிவிப்பு
அண்மையில் இலவச மின்சாரம் பெற தகுதியானவர்களை அடையாளம் காணும் வகையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்டிப்படையில் மக்கள் அனைவரும் ஆதார் எண்ணை தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.
ஆதார் கட்டாயம்
இந்நிலையில், புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசின் அனைத்து மானியங்கள், சலுகைகள், இலவச திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயனாளர்களும் ஆதார் எண் என்ற அடையாளச் சான்றை மட்டுமே வைத்து அரசின் நலத்திட்டங்களை பெற முடியும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு காரணம், பல்வேறு அடையாள சான்றுகள் இருப்பதால் பயனாளிகளை அடையாளம் காண்பதில் இருக்கும் சிக்கலை தவிர்க்கும்பொருட்டு ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாகும்.
நிதி அமைச்சர் ஸ்கெட்ச்
தமிழக அரசின் நிதியமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் இந்த அறிவிப்பின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் பதவி ஏற்றது முதலே சரியான பயனாளிகளை அடையாளம் கண்டு, தகுதியான நபர்களுக்கு அரசின் திட்டங்கள் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். அதற்காக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியிருந்தார். இதனடிப்படையிலேயே அனைத்து துறைகளிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் தரவுகள் இப்போது மாற்றியமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.