பெர்லின்: ஜெர்மனியில் உள்ள உலகின் மிகப் பெரிய மீன் அருங்காட்சியகத்தில் இருந்த தொட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஏறத்தாழ 1,500 மீன்கள் உயிரிழந்தன.
வண்ணமயமான, அரிதான மீன்கள் பல, உலகம் முழுவதிலும் உள்ள மீன் அருங்காட்சியகங்களில் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினில் உலகின் மிகப் பெரிய மீன் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை விபத்து ஏற்பட்டது.
விபத்து குறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, “அக்வாரியத்தில் இருந்த மிகப் பெரிய தொட்டி வெடித்தது. இதனால் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேறியது. உருளை வடிவிலான அந்தத் தொட்டி 25 மீட்டர் உயரம் கொண்டது. இந்த விபத்தில் 1,500 மீன்கள் வரை உயிரிழந்தன. தொட்டியின் அடியிலிருந்த மீன்கள் மட்டும் காப்பற்றப்பட்டன.
அக்வாரியத்தில் இருந்த கடைகளும் பாதிக்கப்பட்டன. விபத்தினால் பெர்லினின் முக்கிய சாலைகளில் தண்ணீர் ஓடியது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த மனித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பெர்லினில் முக்கிய சுற்றுலா மையமாக இருந்த அக்வாரியத்தில் ஏற்பட்ட இந்த விபத்தும், மீன்களின் உயிரிழப்பு ஜெர்மனி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.