ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்; மா.செ கூட்டத்துக்கு ஏற்பாடு – எடப்பாடிக்கு தலைவலி

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என ஓபிஎஸ் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், வெப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஓபிஎஸ் – ஈபிஸ் மோதல்

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி ஏற்பட்ட மோதலில் ஓபிஎஸ் – ஈபிஸ் எதிரெதிர் அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கிய ஈபிஎஸ், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். ஆனால், அதிமுகவில் ஈபிஎஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளராக தனக்கே முழு அதிகாரமும் இருப்பதாக கூறி அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து வந்தார்.

மாவட்ட செயலாளர்கள்

அனைத்து மாவட்டங்களுக்கும் புதிதாக நிர்வாகிகளை நியமித்த ஓ.பன்னீர்செல்வம், விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிவிப்பில், அதிமுக தலைமை செயலகம் லெட்டர் பேட் மற்றும் சீலுடன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில்

அந்த கூட்டம் பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 21 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு வெப்பேரியில் இருக்கும் ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடிக்கு தலைவலி

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஓபிஎஸ் ஏற்பாடு செய்திருப்பதன் பின்னணியில் மேலிடம் இருப்பதாக எடப்பாடி அணி கருதுகிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் சில வாரங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதால், ஓபிஎஸ்ஸின் இந்த மூவ் நிச்சயம் எடப்பாடிக்கு தலைவலியை ஏற்படுத்தும். இதனால், ஓபிஎஸ்ஸை எப்படி சமாளிப்பது? எப்படி அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்? என்ற யோசனையில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.