இந்து மதத்திலிருந்து பிறந்ததா அவதார் – ஜேம்ஸ் கேமரூன் சொல்வது என்ன?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளிவந்து உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த  படம் ‘அவதார்’. இப்படி ஒரு சயின்ஸ் – பிக்ஷன் படமா என படத்தைப் பார்த்து அப்போது வியக்காதவர்களே இல்லை. அப்படத்தின் இரண்டாம் பாகமான ‘அவதார் – தி வே ஆப் வாட்டர்’ படம் உலக அளவில் கடந்த 16ஆம் தேதி வெளியானது. தமிழ் உள்ளிட்ட 160 மொழிகளில் படம் வெளியாகியிருக்கிறது. முதல் பாகம் அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்த சூழலில் அவதார் 2 கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் அவதார் 1 வேறு உலகத்தில் இருந்ததுபோன்று இருந்தது. ஆனால் அவதார் 2 சராசரி சினிமா என்ற வட்டத்திற்குள் வந்துவிட்டதாக பலரும் கூறிவருகின்றனர்.

இந்தச் சூழலில் அவதார் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இந்து மதத்தின் அடிப்படையில்தான் அவதார் 2 படத்தை எடுத்திருக்கிறாரா என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன. அவதார் என்ற வார்த்தையே சமஸ்கிருத வார்த்தையிலிருந்துதான் வந்தது. இந்து மதத்தில் அவதாரம் என்றால் பூமியில் உடல் வடிவத்தில் இருக்கும் ஒரு தெய்வத்தின் வெளிப்பாடு என்று பொருள் ஆகும். 2010ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் டெல்லியில், இந்து புராணங்களின் மீதான தனது காதலை பற்றி பேசியிருந்தார்.

அப்போது பேசிய கேமரூன், “நான் இந்து மதம் புராணங்கள் என அனைத்தையும் விரும்புவேன். ஆனால் இந்தப் படத்தில் இந்து மதத்தை தொடர்புப்படுத்துவதை நான் விரும்பவில்லை. ஆனால் தற்செயலாக இந்தப் படம் இந்து மதத்தோடு தொடர்புப்பட்டிருப்பது சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. அதேசமயம் நான் இதன் மூலம் யாரையும் புண்படுத்தவில்லை”என கூறியிருந்தார். 

மேலும்,அவதாரம் என்றால் என்ன என்று 2007ஆம் ஆண்டு டைம் இதழின் கேள்விக்கு பதிலளித்திருந்த கேமரூன், “மனித உடலில் கடவுள் பிறப்பெடுப்பதை இந்து மதம் அவதாரம் என்கிறது. அதேபோல் மனிதன் தொழில்நுட்பத்துடன் இணைந்து தனி அவதாரமாக உருவாவதை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறேன்” என தெரிவித்திருந்தார். தற்போது ஜேம்ஸ் கேமரூனின் அந்தப் பேச்சுக்களை நினைவுப்படுத்தும் சிலர் அவதார் 2 படம் சனாதன தர்மத்தை எடுத்துக்காட்டுகிறது என்கின்றனர்.

Avatar

அதுமட்டுமின்றி, அவதார் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நீல நிற தோல்களை உடையவர்கள். இந்து மதத்தை பொறுத்தவரை கடவுள் கிருஷ்ணர் நீல நிற தோல் உடையவராகவே சித்தரிக்கப்படுகிறார். எனவே நீல நிற தோலையும் தொடர்புப்படுத்தி அவதார் 2 படம் நிச்சயம் இந்து புராணங்களின் அடிப்படையிலிருந்து உருவாக்கப்பட்டிருப்பதாகவும் குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. 

அதேசமயம், அவதாருடன் இந்து மதம் தொடர்புப்பட்டிருப்பதும், அது தொடர்பான சித்தரிப்புகளும் தற்செயலாகவே நடந்திருக்கின்றன என ஜேம்ஸ் கேமரூன் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். எனவே இந்து மதத்தின் அடிப்படையிலிருந்து அவதார் 2 உருவாகவில்லை  எனவும் எதிர்க்குரல்கள் கேட்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.