மதுரை: கல்லூரி வளாகத்தேர்வுகளில் அனைத்து மாணவர்களையும் சமமாக கருத ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பாப்பன்காடுவைச் சேர்ந்த ஜவகர்லால் நேரு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் படிப்பை முடிக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்களின் வளாகத்தேர்வு குறிப்பிட்ட 30 முதல் 40 கல்லூரிகளில் தான் நடக்கிறது. இதனால் ஒரு சிலருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாட்ச்மேன் உள்ளிட்ட சாதாரண வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. அமெரிக்கா போன்ற பல நாடுகளில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதைப் போல அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கை பொதுவானது. அரசு போதுமான வேலை வாய்ப்பு உருவாக்குவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தங்களது நிறுவனத்தின் நடைமுறைக்கு ஏற்ற வகையில் பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். அவர்களுக்கு ஏற்ற வகையில் தகுதியையும், நிபந்தனைகளையும் விதிக்கின்றனர். இதில், இந்திய நிறுவனமானாலும், பன்னாட்டு நிறுவனமானாலும் சரி. வளாகத் தேர்வுகளில் அனைத்து மாணவர்களையும் சமமானவர்களாக கருத வேண்டும். கல்வி நிறுவனங்களின் வளாகத் தேர்வுகளில் பங்கேற்கும் நிறுவனங்களின் அனுபவம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றையும், குறைந்தது 3 ஆண்டுகால அனுபமுள்ளவர்களா என்பதை பார்க்க வேண்டும். போதிய அனுபவமற்ற நிறுவனங்கள் வளாகத் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.