பீஜிங் : சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், அடுத்தாண்டில் 10 லட்சம் பேர் பலியாகும் அபாயம் உள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், கடந்த 2019-ம்ஆண்டு இறுதியில் வூஹான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலக நாடுகளுக்கு பரவியது.
தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால், பெருந்தொற்றில் இருந்து உலக நாடுகள் மீண்டு வருகின்றன.
இந்நிலையில், சீனாவில் கடந்த மாதம் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியதை அடுத்து, அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதனால், தலைநகர் பீஜிங் உட்பட பல்வேறு நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. நாள்தோறும், 2,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளன.
இதனால், அங்கு இறுதிச்சடங்கு செய்யும் சேவை நிறுவனங்களின் பணிச்சுமை கூடியுள்ளது.
இரண்டு வாரங்களாக கொரோனா பலி எதுவும் பதிவாகவில்லை என சீன அரசு தெரிவித்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் 23 வயது மருத்துவக் கல்லுாரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, கொரோனா கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ளதால், அடுத்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் அங்கு பலியாகும் அபாயம் உள்ளதாக என அமெரிக்காவைச் சேர்ந்த, சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீட்டு பயிற்சி மையம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்