ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்பு 30 சதவிகிதமாக உயர்வு! ஐ.டி ஊழியர்களே அலர்ட்!

நமது வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தால், நமது தெருவில் குறைந்தபட்சம் இரண்டு ஐ.டி ஊழியர்களாவது இருப்பார்கள். இவ்வளவு ஏன்? நமது உறவினர்கள் அல்லது நண்பர்களிலேயே ஒருவராவது ஐ.டி ஊழியராக இல்லாமல் இருக்க மாட்டார்கள். இப்படி ஐ.டி. ஊழியர்கள் எங்கும் இருக்கும் சூழலில், ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்புகள் 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறது.

அதிக வேலைவாய்ப்புகளை வழங்கு ஐ.டி!

உலகளவில் ஐ.டி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய துறையாக இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஐ.டி துறை 227 பில்லியன் டாலர் வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும், இந்த வளர்ச்சி மூலம் நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் 4.5 லட்ச வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பெரும்பாலானோர் ஐ.டி துறையைத் தேர்ந்தெடுப்பதற்கு அதன் ஊதிய உயர்வும், பணியாளர் பலன்களும், வீட்டில் இருந்து பணிபுரியும் (Work from Home) வாய்ப்பும் முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவில் வருடந்தோறும் 15% வரை ஐ.டி. ஊழியர்கள் தங்களது வேலையை இழந்தும் வருகின்றனர். இந்த வருடம் ஐ.டி. ஊழியர்களின் வேலை இழப்பு 30% உயர்ந்துள்ளது.

ஐ.டி நிறுவனங்களில் Work from Home – ஒரு அட்வான்டேஜ் !

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தைகளாக இருந்து வருகிறது. இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியாவில் அதிகளவில் வேலையிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஐ.டி. நிறுவனங்களின் நிரந்தரப் பணி நீக்கம் செய்ய வரையறை சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் நிறுவனத்தில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய நிறுவனங்கள் ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய முடியும்.

ஆனால், பல ஐ.டி. நிறுவனங்கள் அடுத்துவரும் ஆண்டுகளில் ஏற்படக்கூடிய பொருளாதார மந்தநிலையை ஈடுசெய்யும் விதமாகவும், தங்கள் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்கவும் சட்டத்திற்கு புறம்பாக ஐ.டி. ஊழியர்களை மிரட்டி அவர்களை ராஜினாமா செய்ய வற்புறுத்தி வருகின்றன.

ஐ.டி நிறுவனங்கள்

இப்படி ஊழியர்களை வேலையிலிருந்து நீக்காமல், அவர்களாகவே ராஜினாமா செய்தால் ஐ.டி. நிறுவனங்களுக்கு எந்தவித சட்ட சிக்கல்களும் ஏற்படாது என்பதால், அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மாதிரியான சிக்கல்களைத் தவிர்க்க ஐ.டி. துறைக்கென்று பிரத்யேக பணி பாதுகாப்பு சட்டம் உருவாக்க வேண்டும் என்று ஐ.டி. மற்றும் ஐ.டி.இ.எஸ் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த சிக்கலை எதிர்கொள்ள ஐ.டி துறை ஊழியர்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.