காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலன் வீட்டில் கேரம் வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் அஞ்சலி (22). புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பி.காம் படித்துள்ளார். கேரம் விளையாட்டு வீராங்கனையான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் காதலானது.
இதையடுத்து, காதலன் வீட்டுக்கு அடிக்கடி அஞ்சலி சென்று வந்துள்ளார். ஒருமுறை அஞ்சலி தனது காதலனுடன் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றார். இதைப் பார்த்த அஞ்சலியின் சகோதரர் கவுதமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலியை கண்டித்துள்ளனர். மேலும், அஞ்சலியின் காதலனையும் கடிந்து கொண்டனர்.
ஆனால், அஞ்சலி தொடர்ந்து அந்த இளைஞருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். அப்போது, தங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்னுடன் நீ பேசுவதை விரும்பவில்லை என்றும், நான் உன்னுடன் பேசக்கூடாது என கண்டிப்பதாக காதலன் தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையுடன் இருந்த அஞ்சலி நேற்று முந்தினம் காதலன் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் கதவு சாத்தப்பட்டு இருந்தது. கதவை தள்ளிக்கொண்டு அவர் வீட்டிற்குள் சென்றார்.
அங்கு யாரும் இல்லாத நிலையில் மாடியில் காதலன் தங்கியிருந்த அறைக்கு சென்று மின் விசிறியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கினார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த காதலன், தனது அறையில் அஞ்சலி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அஞ்சலியை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.