நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை வெளியிட மறுப்பு? – திடீரென எழுந்த சிக்கலுக்கு என்ன காரணம்?

நயன்தாராவின் ‘கனெக்ட்’ திரைப்படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், திட்டமிட்டப்படி இந்தப் படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

‘மாயா’, ‘கேம் ஓவர்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ரோகித் சுரேஷ் சரஃப், ஹனியா நஃபீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரர் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படம் வருகிற 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

99 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், இடைவேளையின்றி திரையரங்குகளில் திரையிடப்படும் என படக்குழு விளம்பரப்படுத்தி வந்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பி வந்தது. படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இந்தப் படத்திற்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளது. திரையரங்குகளில் படத்தின் டிக்கெட்டை விட, இடைவேளையின்போது அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்களால் தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல வாபம் கிடைக்கும்.

image

ஏனெனில் சாதாரணமாக வெளியில் விற்கப்படும் டீ, காஃபி, சமோசா கூட அங்கு பல மடங்கு லாபம் வைத்தே விற்கப்படும். ஆனால் நயன்தாராவின் ‘கனெக்ட்’ திரைப்படம் இடைவேளையின்றி வெளியிடப்பட்டால், உணவுப் பொருட்கள் மீதான வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால், இந்தப் படத்தை இடைவேளையின்றி வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் இந்தப் படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா என்று எதிர்பார்ப்பு நீடித்துவந்த நிலையில், ‘கனெக்ட்’ திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்திற்கு இடையே இடைவேளை விட, அதாவது முதல் 59 நிமிடங்கள் படம் ஓடியப் பின்பு இடைவேளை, அதற்குப் பிறகு 40 நிமிடங்கள் மீதிப் படம் திரையிட படக்குழு சம்மத்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் இன்று அல்லது நாளைக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.