சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இருந்து சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் தினமும் சேகரிக்கப்படுகின்றன. மேலும், தென்னை மரக் கழிவுகள் போன்ற தோட்டக் கழிவுகளானது நார்கள் மற்றும் பயோ உருளைகளாக மறுசுழற்சி செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுகளாக கட்டப்பட்டு மறுசுழற்சியாளர்களிடம் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக கொடுக்கப்படுகின்றன.
இந்தநிலையில் சென்னையில் உள்ள கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளை எளிதில் தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 100 சதவீதம் அனைத்து கடைகளிலும் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைப்பதை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களிடம் குப்பைத் தொட்டிகளை உடனடியாக வைக்க அறிவுறுத்தப்பட்டு, ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும் என்றும்,நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-ன்படி அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.