“அவங்கள மாதிரி நான் இல்லாம இருக்கலாம். ஆனா…" – 'பதான்' படம் குறித்து பேசிய ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ‘ஜீரோ’ படத்தின் தோல்வி தன்னை எவ்வாறு மாற்றியது என்றும், அதிலிருந்து மக்கள் விரும்பும் ஒன்றை செய்ய எவ்வாறு தான் துணிந்தேன் என்பது குறித்தும் உற்சாகத்துடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். கடந்த 2018-ம் ஆண்டில் வெளியான ‘ஜீரோ’ படத்திற்குப் பிறகு, ‘பதான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ஷாருக்கான். இந்தப் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சல்மான் கான் மான் மற்றம் ஹிருத்திக் ரோஷன் சிறப்புத் தோற்றத்தில் வரும் இந்தப் படம் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளிவர உள்ளது.

இதனால் எதிர்பார்ப்புகள் எகிறிவந்தநிலையில், கடந்த வாரத்தில் இந்தப் படத்திலிருந்து வெளியான ‘பேஷரம் ரங்’ பாடல் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தப் பாடல் வரி மற்றும் பாடலில் காவி நிற பிகினி உடையில் தீபிகா படுகோனே தோன்றியிருப்பதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாடல் வரிகள் மற்றும் தீபிகா படுகோனே வரும் அந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் எனவும், அதையும் மீறி திரையரங்குகளில் திரையிடப்பட்டால் தீயிட்டு கொளுத்த வேண்டும் என்றும் போராட்டம் வெடித்தது.

image

இதனால் ‘பதான்’ பாய்காட் ட்ரெண்டாகி வரும் நிலையில், இது ஒருபுறம் இருக்க, இந்த எதிர்றை விமர்சனங்களை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் ‘பதான்’ படத்தை பல்வேறு தளங்களிலும் விளம்பரப்படுத்துவதில் நடிகர் ஷாருக்கான் தன்னை பரப்பரப்பாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். எனினும் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பிருத்வி ராஜ் உள்பட திரைப் பிரபலங்கள் பலர் ஷாருக்கானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுடனான உரையாடலின்போது, யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆதித்யா சோப்ரா மற்றும் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் ஆகியோரை ‘பதான்’ ஆக்ஷன் ஹீரோ படத்தில் தன்னை நடிக்க வைக்கப்பதற்கு எவ்வாறு சம்மதிக்க வைத்தார் என்று சுவாரஸ்யம் பகிர்ந்துள்ளார்.

அதில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஆனந்த் எல் ராயின் ‘ஜீரோ’ படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தபோது, இதுவரை செய்யாத ஒன்றைச் செய்ய நினைத்ததை ஷாருக்கான் பகிர்ந்து கொண்டார். ஷாருக்கான் பேசுகையில், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் கொஞ்சம் பலவீனமாக உணர்ந்தேன். என் உடலில் சில காயங்கள் இருந்தன. அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டிருந்தேன். ஆனால் இதற்கு முன்பு, செய்யாத ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன்.

image

அதற்காக நான் மிகவும் உடல் தகுதி பெற வேண்டும் என எண்ணினேன். என் நண்பர் ஆதித்யா சோப்ரா மற்றும் சித்தார்த் ஆனந்த் ஆகியோரிடம், ‘ஆக்ஷன் படம் பண்ணுங்க’ என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் என்னிடம், ‘சார், நீங்கள் ஆக்ஷன் படம் செய்தால் மிகவும் சோர்வடைந்து விடுவீர்கள்’ என்று சொன்னார்கள். குறைந்தபட்சம் முயற்சி செய்யுமாறு நான் அவர்களிடம் கேட்டேன்.

மேலும், ‘நான் டைகர் ஷெராஃப் அல்லது டுக்கு (ஹிருத்திக் ரோஷன்) போல் உடலளவில் சிறந்தவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன் என்று தெரிவித்தேன்” இவ்வாறு ஷாருக்கான் கூறியுள்ளார். ஷாருக்கானின் சுமார் 30 வருட சினிமா வாழ்க்கையில், ‘பதான்’ திரைப்படம் அதிரடி காட்சிகளுடன், முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.