தனது பதவிக்காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முயன்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், தனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பியதாகவும், ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தடையாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.
லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள அவரது இல்லத்தில் வெளிநாட்டு செய்தியாளர்கள் சந்திப்பின் போது எனது மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன் என்று கூறியுள்ளார். ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஒரு தடையாக மாறியது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அப்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா, இந்தியாவுடன் சிறந்த உறவை வைத்துக் கொள்ள இன்னும் அதிக விருப்பம் கொண்டிருந்தார் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு, இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தனது அரசாங்கம் வலியுறுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியா முதலில் தனது முடிவை மாற்றிக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரால் மோதலை தீர்க்க முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
மோடி வலதுசாரி கட்சியில் இருந்து வந்தவர், அதனால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று தான் விரும்பியதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஜெனரல் பாஜ்வா கடந்த ஏழு மாதங்களில் எங்கள் மீது பயங்கர அதிகாரத்தை கட்டவிழ்த்துவிட்டதாக இம்ரான் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதார பேரழிவுக்கு ஜெனரல் பஜ்வாவும் பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ள அவர், பொருளாதார முன்னணியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் எனது அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கு ஜெனரல் பஜ்வா முக்கிய காரணமாக இருந்தார் என்று விமர்சித்துள்ளார்.
newstm.in