ஓபிஎஸ் உள்ளே.. எடப்பாடி அவுட்; மோடி சிக்னல்; புகழேந்தி தடாலடி!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தலைமை பதவியை குறி வைத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக

தாக்கல் செய்துள்ள வழக்கு தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் விசாரணையில் உள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த இந்த வழக்கு ஜனவரி 4ம் தேதி விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் நாளை அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டி இருக்கிறார்.

இந்நிலையில் வரும் 27ம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி வெளியிட்டுள்ள தகவல் அதிமுகவில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசி உள்ளார். பாஜகவுடன் கூட்டணி முறிந்துவிட்டது. பாஜகவிடம் இருந்து ஒட்டுமொத்தமாக நாங்கள் விலகி விட்டோம் என்பதை தான், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி உணர்த்தி இருக்கிறார்.

சி.வி.சண்முகம் பேச்சு ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு என்பது தெளிவாகிவிட்டது. 4 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்போது, பாஜக கூட்டணி தேவைப்பட்டது.

ஆட்சியில் இல்லை என்றதும் தேவைப்படவில்லை. அன்று அதிமுகவில் ஒற்றுமை தேவைப்பட்டது. தற்போது திடீர் கோபம் ஏன்? என்பதை எடப்பாடி பழனிச்சாமி தெளிவுப்படுத்த வேண்டும்.

ஓபிஎஸ் மீது, பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மரியாதை வைத்து உள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக நல்ல மரியாதையுடன் நடத்துகிறது. ஊழல்வாதிகளுடன் கூட்டணி இல்லை என்பது தான் பாஜகவின் முடிவு.

இந்த விவகாரத்தில் அண்ணாமலை நல்ல முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக விவகாரத்தில் விரைவில் தீர்ப்பு வர உள்ள நிலையில் ஒருபுறம் ஓபிஎஸ், மறுபுறம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் மோடியின் செல்வாக்கு ஓபிஎஸ்சுக்கு இருப்பது போல புகழேந்தி பேசி இருப்பது அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.