கல்லூரி முடிந்து திரும்பியபோது சோகம்: பஸ்-கார் மோதல்.. 3 மாணவர்கள் பலி..!

கோவில்பட்டி அருகே, கல்லூரி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பஸ்சும் காரும் மோதிய கோர விபத்தில் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாநகரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் மகன் கீர்த்தி (23). இவர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள செவல்பட்டி பி.எஸ்.ஆர் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று மாலை, கல்லூரி முடிந்ததும் கீர்த்தி தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார்.

அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் தனது நண்பர்களான நாலாட்டின்புத்தூரை சேர்ந்த பாலமுருகன் மகன் அஜய் (23), வானரமுட்டி வெயிலுகந்தபுரத்தை சேர்ந்த உதயகுமார் மகன் செந்தில்குமார் (24), வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த அழகர்சாமி மகன் அருண்குமார் (21), ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் (22) ஆகியோரை தனது காரில் அழைத்துச்சென்றார்.

கோவில்பட்டி அருகே அய்யனேரி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் கார் சென்றபோது, எதிரே கோவில்பட்டியில் இருந்து ஜமீன்தேவர்குளம் நோக்கி தனியார் டவுன் பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் காரும், பஸ்சும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த கீர்த்தி மற்றும் அஜய், செந்தில்குமார் ஆகியோர் காரில் அமர்ந்தபடி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அருண்குமார், விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி (65) என்பவரும் காயம் அடைந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.