டாஸ்மாக் பார் நேரம் மாற்றம்?; நீதிமன்றம் போட்ட உத்தரவு!

டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரை சேர்ந்தவர்கள் மோகன், கோபிநாத். இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிம்ன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்து உள்ளனர்.

இந்த மனுவில் மோகன், கோபிநாத் ஆகிய இருவரும் கூறி இருப்பதாவது:

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதை ஒட்டி அமைந்து உள்ள மது பார்கள் சரியாக இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. மதுபான கடைகள் மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், கடை அருகிலோ, பார்கள் முன்பாகவோ அல்லது பொது இடங்களிலோ அமர்ந்து மது அருந்துகின்றனர்.

இவ்வாறு மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது. இது மட்டும் இல்லாமல் சாலையோரங்களில் மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை பொது இடங்களிலும், அருகில் உள்ள கால்வாய்களிலும் கண்டபடி வீசி விட்டு செல்கின்றனர்.

இந்த நேரங்களில் குற்றங்களும் அதிகளவில் நடைபெறுகிறது. கடந்த 2003ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுக்கடைகள் திறந்து வைக்கலாம் என, அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் மது பாட்டில் வாங்குபவர்கள் அதை அருந்துவதற்கு வசதியாக பார்கள் இயங்கும் நேரங்களை மாற்றம் செய்தால் பொது இடங்களில் நடக்கும் குற்றங்களை தடுக்கலாம் என, அரசுக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றம் என்பதால் பார்கள் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு மோகன், கோபிநாத் ஆகிய இருவரும் தங்களது மனுவில் கோரிக்கை வைத்து இருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:

மது கடைகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மது பார்கள் சரியாக இரவு 10 மணிக்கு மூடப்படுவதால் கடைசி நேரத்தில் வந்து மது பாட்டில்கள் வாங்குபவர்கள், கடை அருகிலோ, பார்கள் முன்பாகவோ அல்லது பொது இடங்களிலோ அமர்ந்து மது அருந்த வேண்டிய நிலை உள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. இது மட்டுமில்லாமல் சாலையோரத்தில் மது அருந்துபவர்கள் பாட்டில்களை சாலைகள்லேயே வீசி செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.