வேலூர்: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் தூய்மை பணிக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு தலா ஒரு பள்ளிக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 31 ஆயிரத்து 210 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.6 கோடியே 24 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை செலவிடுவதற்கான வழிகாட்டுதல்களையும் அரசு வழங்கியுள்ளது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாநில திட்ட இயக்குனரகத்தில் இருந்து செயல்முறைகள் பெறப்பட்டவுடன், கலெக்டருடன் கலந்தாலோசித்து அரசின் உத்தரவின்படி மற்ற துறைகளில் இருந்தும் பள்ளிக்கு கிடைக்கும் அனைத்துவித ஆதாரங்களையும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடுதல் வேண்டும். மேலும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பணியை புகைப்படங்களுடன் கூடிய தொகுப்பை எம்டிஓ மூலம் தயாரித்து அனுப்புவதுடன், புகைப்படத்துடன் எடுக்கப்பட்ட நாள், மாதம் மற்றும் பள்ளியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இவ்வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
