அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் கடந்த மே 9 ஆம் திகதி தாக்கி
எரிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி, குற்றவியல் சட்டத்தின்
கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு
அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை ( ரிட் )
மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு
நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.
மே 9 சம்பவங்களில் வீடுகளை இழந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன,
காமினி லொக்குகே, ஜனக பண்டார தென்னகோன், பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர,
சிறிபால கம்லத், எஸ், எம், சந்திரசேன, ஷெஹான் சேமசிங்க, ரோஹித அபேகுணவர்தன,
கோகிலா குணவர்தன, சஹான் பிரதீப் உள்ளிட்ட 39 பேர் இணைந்து இம்மனுவைத் தாக்கல்
செய்துள்ளனர்.
பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளோர் விபரம்
பொலிஸ்மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, பாதுகாப்பு படைகளின்
தலைமை அதிகாரி, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா
அதிபர் தேசபந்து தென்னக்கோன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
உள்ளிட்ட 18 பேர் இம்மனுக்களில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அரசியல்வாதிகளின் வீடுகளைத்
தாக்கி தீ வைத்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அட்மிரல் ஒவ் த
ப்ளீட் வசந்த கர்ணாகொட, மார்ஷல் ஒவ் த எயர் போர்ஸ், ரொஷான் குணதிலக்க மற்றும்
ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது என
மனுதாரர்களான அரசியல்வாதிகள் இந்த ரிட் மனுவில் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்களின் பின்னணியில் சதி
மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னணியில் சதி இருப்பதாக
அக்குழு கண்டறிந்துள்ளதாகவும், இது தொடர்பில் மேலும் பல பரிந்துரைகளை
வழங்கியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை எனவும்,
குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் கீழ்
விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க
வேண்டும் எனவும் மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்தத் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத பொலிஸ் மற்றும்
இராணுவ அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது குற்றவியல் மற்றும் இராணுவ
சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் மனுவில் மேலும்
கோரப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் இடம்பெறும் போது, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாகச்
செயற்பட்ட ஜெனரால் சவேந்திர சில்வாவின் நடவடிக்கை சந்தேகத்துக்குரியதாக
இருந்தது எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கரன்னாகொட குழுவின் அறிக்கையை மையப்படுத்தி இந்தச் சந்தேகம் மனுவில்
எழுப்பட்டுள்ளது.
இந்த மனு மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும்
தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்காக
எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன முன்னிலையாகிய விடயங்களை முன் வைத்த நிலையில், பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.