”ஆய்வாளர் காவல்நிலையத்தில்தான் இருந்தார்” – சாத்தான்குளம் வழக்கில் காவலர் சாட்சியம்

சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கு சம்பவத்தின் போது நான் காவல்நிலையத்தில் இல்லை என நீதிமன்றத்தில் ஆய்வாளர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால்  சம்பவத்தின்போது காவல்நிலையத்தில் தான் பணியில் இருந்தார் என நீதிமன்றத்தில் காவலர் ரேவதி சாட்சி அளித்ததால், வழக்கு 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தந்தை – மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 46 சாட்சிகளிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணையானது நேற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக நடைபெற்றது.
image
அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர். வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் நீதிபதி முன்பாக வழக்கில் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதி மூன்றாவது நாளாக ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவரிடம் சாத்தான்குளம் முன்னாள் காவல் ஆய்வாளர் ஶ்ரீதர் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது காவல் ஆய்வாளர், தான் காவல் நிலையத்தில் இல்லை என்றும், மற்ற காவலர்களை அடிக்க சொல்லி தூண்டவில்லை என்றும் மறுத்து வாதிட்டார். பின்னர் தலைமை காவலர் ரேவதி சாட்சியத்தின்போது ஆய்வாளர் ஶ்ரீதர் காவல் நிலையத்தில் தான் இருந்தார் என்பதையும், மற்ற காவலர்களை தொடர்ந்து தூண்டிவிட்டு இருவரையும் அடித்து கொலை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார் எனவும் கூறினார். இதனையடுத்து வழக்கானது 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.