எடப்பாடி பழனிசாமி தரப்பில் சமர்ப்பித்த அதிமுகவின் வரவு-செலவு கணக்கு தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியீடு

புதுடெல்லி: அதிமுக இடைக்கால பொது செயலாளர் பெயரில் தாக்கல் செய்த வரவு-செலவு கணக்குகள் மற்றும் வருமானவரி விவரங்களை தலைமை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதன்மூலம், அவரை இடைக்கால பொது செயலாளராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், அதிமுக விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது உள்பட பல்வேறு விவரங்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களாக சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2021-22ம் நிதியாண்டுக்கான அதிமுகவின் வரவு-செலவு கணக்கு விவரங்களை கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமர்ப்பித்துள்ளார்.

அந்த ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஏற்று கொள்ளப்படுகிறது. இது, அதிமுகவின் சார்பாக வருமானவரி கணக்கும் எடப்பாடி பழனிச்சாமி பெயரிலேயே செலுத்தப்பட்டுள்ளது. அதன் நகலும் தேர்தல் ஆணைய தரப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுகவின் கணக்குகள் தொடர்பாக அவர்களின் தரப்பு பட்டய கணக்காளர்களுக்கு எழுதப்பட்ட தகவல் பரிமாற்றங்களும் எடப்பாடி பழனிச்சாமி, இடைக்கால பொது செயலாளர் என குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிவேற்றத்தை அடிப்படையாக கொண்டு பார்த்தால், அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக தெரிய வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.