வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்டசுனாமி பேரழிவுக்கு பிறகு புதுச்சேரிக டல் நிலையில்லாமல் உள்ளது. அடிக்கடி நீரோட்ட மாற்றம் ஏற்பட்டு கடற்கரை மணல்பரப்பு முற்றிலும் காணாமல் போகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மணல் பரப்பை பார்க்க முடியாமல் ஏமாறும் சூழல் இருந்தது. இதனையடுத்து மணல் பரப்பை மீண்டும் கொண்டு வர மத்திய அரசின் உதவியை புதுச்சேரி அரசு நாடியது. இதற்கான ஆய்வை தேசிய பெருங்கடல் தொழில் நுட்பக் கழகம் மேற்கொண்டது.

மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.24 கோடியில் கடற்கரை காந்தி சிலை பின்புறம், மணல் பரப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக இரும்பு மிதவை தலைமை செயலகம் எதிரே கடலில் அமிழ்த்தி செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டது. இதனால் ஆறுதல் அளிக்கும் வகையில், தலைமை செயலகம் எதிரே மட்டும் செயற்கை கடற்கரை மணற்பரப்பு உருவானது.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல், கடந்த 9ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் சென்னை நோக்கி நகர்ந்து சென்றதால் புதுச்சேரி தப்பியது. இருப்பினும் புயல் சின்னம் காரணமாக கடலில் பல இடங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பல இடங்களில் மணற்பரப்புகள் காணாமல் போயுள்ளது.
புதுச்சேரி கடலில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழக நிபுணர் குழுவினர்நவீன கருவிகளுடன் தற்போது முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். தலைமை செயலகம் முதல் வீராம்பட்டிணம் வரையில் 7 கி.மீ., தொலைவிற்கு மாண்டஸ் புயல் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்களை சேட்டிலைட் உதவியுடன், பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழக நிபுணர் குழுவினர் கூறுகையில், புதுச்சேரியில் பல இடங்களில் கடும் கடலரிப்பு ஏற்பட்டு, கருங்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. எனவே மாண்டஸ் புயல் உருவாதற்கு முன்னதாக புதுச்சேரி கடற்கரையில் தலைமை செயலகம் முதல் வீராம்பட்டிணம் வரையில் உள்ள கடற்கரை சூழல் செயற்கைகோள் உதவியுடன், பதிவு செய்து வைத்துள்ளோம். தற்போது, மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி கடலில் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய இதே கடற்கரை பகுதியில் 7 கி.மீ., துாரத்திற்கு மீண்டும் ஆய்வு நடத்தி வருகிறோம். பெரும்பாலான ஆய்வுகளை முடித்துவிட்டோம்.
செயற்கோள் மூலம் எடுக்கப்பட்ட இரண்டு அளவுகளை கணினி மூலம் ஒப்பிட்டு, எங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மணற்பரப்பு காணாமல் போயுள்ளது என்பதை கண்டறிய உள்ளோம்.
இதன் மூலம் புதுச்சேரியில் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாதிப்புகளை புரிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப அரசினால் கடலோர பாதுகாப்பு திட்டங்களையும் செயல்படுத்த முடியும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement