நியூடெல்லி: உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் மற்றும் கொரியாவில் அதிகரித்து வரும் மரபணு மாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் ஒருமுறை கோவிட் பரவலாம் என்ற அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.நேற்று ஒரு நாளில் ஜப்பானில் 1.85 லட்சம், கொரியாவில் 87,559, பிரான்சில் 71,212, ஜெர்மனியில் 52,528 உட்பட உலகம் முழுவதும் 5,59,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா புதிய அலை கவலையளிக்கிறது. இந்த நிலையில், ராகுல் காந்தி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது.
இது தொடர்பாக ராகுல் காந்திக்கு மத்திய அரசு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. அதில், “காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரையினால் கொரோனா பரவல் அதிகரித்து விடும் அபாயம் இருப்பதால், இந்த பாத யாத்திரையில் செல்பவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால், தேச நலனைக் கருத்தில் கொண்டு இந்த யாத்திரையை ஒத்தி வைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்பதால், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் 20.23% மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது.
தற்போது, பொது இடங்களில் முகக்கவசம் அணியும் வழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. எனவே, முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. பொதுமக்களும் தங்கள் பங்குக்கு கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் கொரோனா பரவலை தவிர்க்கலாம்.
கொரோனா பரவலை நாட்டில் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மத்திய அரசு, மரபணு மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை அதிகரிக்குமாறும், தரவுகளை உரிய முறையில் பதிய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவிட் நோய்க்கு இருவர் பலியானார்கள். இதன் மூலம், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 44.6 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் கொரோனா பலி எண்ணிக்கை 530,677 ஆகவும் உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க | மீண்டும் கொரோனா ஊரடங்கா? இந்தியாவில் இன்று முக்கிய சந்திப்பு, உலக நாடுகளில் பீதி