பீஜிங்: சீனாவில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) 3,101 பேருக்கு அறிகுறிகளுடன் தொற்று உறுதியானது. அதற்கு முந்தைய நாளில் 2,722 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இப்போதைக்கு சீன மெயின்லான்டில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 276 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தேசிய சுகாதார ஆணையத்தின் படி, நேற்று புதிதாக கரோனா பலி ஏதும் பதிவாகவில்லை. திங்கள்கிழமையன்று 5 பேர் கரோனா தொற்றால் பலியாகினர். தலைநகர் பீஜிங்கில் மட்டும் கடந்த 2 நாட்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.
அறிகுறிகளுடன் தொற்று பரவுவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுவதாகவும் சில மருத்துவமனைகளில் வாக்குவாதம், கைகலப்பு என மக்கள் ரகளையில் ஈடுபடுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார நிறுவன ஆலோசகர்கள் இது தொடர்பாக கூறுகையில், “கரோனா பெருந்தொற்று காரணமாக மீண்டும் அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக இப்போதே அறிவிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது.
முன்னதாகதொற்றுநோய் நிபுணரும், சுகாதாரப் பொருளியல் வல்லுநருமான எரிக் பெய்கிள் டிங், வால் ஸ்டீரிட் ஜெர்னல் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். அடுத்த 90 நாட்களில் சீனாவில் விரைவில் 60 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்படும் என்றும் உலகளவில் 10 சதவீதம் பேருக்கும் தொற்று ஏற்படும்” என்று எச்சரித்தார். இத்தகைய சூழலில் கரோனா வைரஸ் புதிய திரிபுகள் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து வருவதாக சீன சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனா உள்பட உலக நாடுகள் பலவற்றிற்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வலியுறுத்தல்: கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகள் தினந்தோறும் இந்த ஆய்வகங்களுக்கு அவசியம் அனுப்ப வேண்டும் என மத்திய அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது 3,490 பேர் கரோனா தொற்று பதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று டெல்லியில் உயரதிகாரிகளுடன் கரோனா பரவலை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய ஆயஹ்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கிறார்.