`நாயை அடிக்கிற மாதிரி அடிச்சிருவேன் பாத்துக்கோ..!' – மிரட்டிய பெண் எஸ்.ஐ – விளக்கம் கேட்ட எஸ்.பி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் கந்தன். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையின் பிணவறையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி தாயம்மாள்.  இவர்களின் மகள் தனலெட்சுமிக்கும், தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த முத்துக்குட்டி நாராயணன் என்பவருக்கும்  திருமணம் நடந்திருக்கிறது. கணவன், மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவதும், பின்னர் இருவரின் பெற்றோர் சமரசம் செய்து வைப்பதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம்

இந்த நிலையில் கடந்த ஓர் ஆண்டாக  தனலெட்சுமி தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கணவர் வீட்டார் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில், தனலெட்சுமியின் உடைமைகள், சீர்வரிசையாகக் கொடுத்த பொருள்களை கணவர் முத்துக்குட்டியின் வீட்டிலிருந்து எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தனலெட்சுமி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். இந்த புகார் மனு மீது உதவி ஆய்வாளர் மகேஸ்வரி விசாரணை நடத்தியிருக்கிறார்.

இரு வீட்டாரையும் அழைத்த மகேஸ்வரி விசாரணைக்குப் பிறகு தனலெட்சுமியின் தாலியைக் கழட்டி, கணவர் முத்துக்குட்டியிடம் கொடுக்கச் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து தனலெட்சுமியின் பெற்றோர் உதவி ஆய்வாளர் மகேஸ்வரியிடம்,  ”நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது தாலியைக் கழட்டச் சொல்லி விட்டீர்களே?” எனக் கேட்டிருக்கின்றனர். அதற்கு, “என்ன சொல்லி பெட்டிஷனை வாங்குனேன். இப்படி வில்லங்கம் பேசுறதுக்கா பெட்டிஷனை வாங்குனேன். நாயை அடிச்சு விரட்டுற மாதிரி விரட்டிருவேன்.

தனலெட்சுமியின் பெற்றோர்

பொணத்தை தூக்கிட்டு கிடக்கிறேன்னு கம்ப்ளைன்ட்டை எடுத்தேன். நீ கோர்ட்ல போயி பாத்துக்கோ. நீ எப்படி நகையை வாங்குறேன்னு பார்க்குறேன்” என விரலை நீட்டி கோபத்துடன் பேசி அனுப்பியிருக்கிறார். உதவி ஆய்வாளர் மகேஸ்வரி பேசிய இந்த வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து தனலெட்சுமியின் தந்தை கந்தனிடம் பேசினோம். “என் மகள் தனலெட்சுமிக்கு  கல்யாணமாகி ரெண்டு வருஷமாகுது. கல்யாணமான நாள்ல இருந்து அவளோட கணவர் முத்துக்குட்டி தினமும் குடிச்சுட்டு வந்து பிரச்னை பண்ணுவார். இதனால ரெண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துச்சு.  

ஒரு வருசத்துக்கு முன்னால என் மகளுக்கு பெண் குழந்தை பிறந்து இறந்து போச்சு. பேருகாலத்துக்கு வந்தவளை அதுக்குப் பிறகு வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலை. காரணம் கேட்டதற்கு `உன் மகள் என் மகனுக்கு வேண்டாம். நாங்க அவனுக்கு  வேற கல்யாணம் செஞ்சு வைக்கப் போறோம்’னு  சொன்னாங்க. கணவரோட சேர்த்து வைக்கச் சொல்லி நாங்க ஒரு வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு விசாரணையில ஒன்னா சேர்ந்து வாழ்றதா சொன்னதுனால அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.  ஆனால், அவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கு நிலுவையிலதான் இருக்கு. இந்த நிலைமையில என் மகளோட துணிமணிகள், சீதனமாக் கொடுத்த பொருள்களை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி அனைத்து மகளிர் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம்.  

உதவி ஆய்வாளர் மகேஸ்வரி

எஸ்.ஐ., மகேஸ்வரி, ரெண்டு வீட்டுக்காரங்களையும் விசாரணைக்கு வரச்சொன்னாங்க. ஆனா, எங்களை வெளிய நிறுத்திட்டு  மகளை மட்டும் உள்ளே கூப்பிட்டாங்க. அவங்க விசராணை, கேள்விகள் எல்லாமே முழுக்க முழுக்க எதிர்மனுதாரருக்கு சாதகமாகத்தான் இருந்துச்சு. என் மகளோட கழுத்துல கிடந்த தாலியை கழட்டித் தரச்சொல்லி அதை கணவர் வீட்டுக்காரங்ககிட்டயே கொடுத்துட்டாங்க.  விவாகரத்து வழக்கு நிலுவையில இருக்கும்போது, சட்டப்படி ரெண்டு பேரும் விவாகரத்து பெறாத நிலையில தாலியை கழட்டச் சொன்னது சரியானதா? இதுக்கு நியாயம் கேட்டு பேசினப்போதான், நாயை அடிச்சு விரட்டுறமாதிரி விரட்டுவேன். பொணத்தை தூக்குறவன்னு அசிங்கமா பேசினாங்க.  

மனவேதனையில  வீட்டுக்கு வந்துட்டோம். மறுநாள் அந்த எஸ்.ஐ மகேஸ்வரியே எங்களுக்கு போன் செஞ்சு, `என்னப்பா.. சாமான்களையெல்லாம் மாப்பிளை வீட்டுல இருந்து எடுத்தாச்சா. ஒன்னும் பிரச்னை இல்லையே?’ எனக் கூலாகப் பேசினார். அவரது பேச்சு எங்களுக்கு மேலும் மனவருத்தத்தை ஏற்படுத்த, என் மனைவி தாயம்மாள் எங்கிட்ட இருந்து போனை வாங்கி, `ஆடு, மாடு கழுத்துல கிடந்த கயித்தை கழட்டி வீசுற மாதிரி, தாலியைக் கழட்டிக் கொடுக்கச் சொல்லிட்டீங்களே? இது சரியான நடவடிக்கையாம்மா? சாமான்களை எடுக்கத்தான் உங்ககிட்ட புகார் கொடுத்தோம். கோர்ட்ல கேஸ் விசாரணையில இருக்கும்போது தாலியை கழட்டிக் கொடுக்கச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் இருக்கா?’ என அழுதுகிட்டே கேட்டாள்.

அனைத்து மகளிர் காவல் நிலையம்

`எல்லா தப்பும் என் மேலதான்மா. நான் பண்ணுனது தப்புதான்’ என மன்னிப்பு கேட்டார். எல்லாம் முடிஞ்சதுக்குப் பிறகு மன்னிப்பு கேட்டு என்ன பிரயோஜனம்” என விம்மி அழுதார்.

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரியிடம் பேசினோம். “நடந்த சம்பவத்துக்கு என்னோட விளக்கத்தைச் சொல்லிட்டேன். அவங்ககிட்ட கேட்டுக்கோங்க” எனச் சொல்லி சாமாளித்து போனை துண்டித்தார். கோவில்பட்டி உதவி காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷை தொடர்பு கொண்டோம், “காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் மகேஸ்வரியிடமும் விளக்கம் கேட்கப்பட்டு மாவட்ட எஸ்.பி-யின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறேன். தவறு நடந்திருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.