சென்னை: நிர்பயா திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட ரூ.425 கோடியில் ரூ.113 கோடியை மட்டுமே சென்னை மாநகராட்சி இதுவரை செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 2013-ல், நிர்பயா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பின், 2,000 கோடி ரூபாயாக, 2016-ல் உயர்த்தப்பட்டது.
இந்த நிதியின் வாயிலாக, பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய பெருநகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
சென்னையில் இத்திட்டத்தை 425.06 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, திட்டம் தயார் செய்யப்பட்டு, 2018-ல் அனுமதி வழங்கப்பட்டது. இதில், 60 சதவீத நிதியான 255.03 கோடி ரூபாயை மத்திய அரசும், 40 சதவீத நிதியான 170.03 கோடி ரூபாயை மாநிலம் அரசும் வழங்குகிறது.
இத்திட்டத்தை மூன்றாண்டுகள் என 2021-ல் முடிக்க திட்டமிடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, சென்னை காவல் துறை, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆகியவை இணைந்து செயல்படுத்துகிறது. இதில்,
- சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத 617 இடங்கள் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல்.
- அவசரகால பட்டன், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துதல்
- அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல்
- பொது இடங்களில் பெண்களுக்கு கழிப்பறை வசதிகள்
- பெண்கள் பாதுகாப்பு படை
- அவரச கால தொலைபேசி மற்றும் மொபைல் ஆப் வசதி
- பெண்களுக்கு சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல்
இதுபோன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், நான்கு ஆண்டுகள் கடந்தும் பல பணிகள் முழு செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, மாநகராட்சி மேயர் இந்தத் திட்டத்தில் அதிகம் கவனம் செலுத்தி, அனைத்துப் பணிகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “நிர்பயா திட்டத்தில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் தெருவிளக்கு, பள்ளிகளில் ‘சிசிடிவி’ கேமரா போன்ற பணிகள் முடிந்துள்ளன. மேலும் பல பணிகள் 70 சதவீதத்திற்கு மேல் நிறைவடைந்துள்ளன. அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது” என்றனர். செலவிடப்பட்ட நிதி விபரம்:
துறைகள் – ஒதுக்கீடு – செலவு செய்யப்பட்டது
- சென்னை மாநகராட்சி – ரூ.173.59 கோடி – ரூ.49.58 கோடி
- சென்னை காவல் துறை – ரூ.165.80 கோடி – ரூ.43.17 கோடி
- மாநகர போக்குவரத்து கழகம் – ரூ.72.71 கோடி – ரூ.13.61 கோடி
- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை – ரூ.12.96 கோடி – ரூ.6.76 கோடி
- மொத்தம் – ரூ.425.06 கோடி – ரூ.113.12 கோடி