சான் ஃப்ரான்சிஸ்கோ: ட்விட்டர் சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ட்விட்டர் சிஇஓ பதவியை நான் விரைவில் ராஜினாமா செய்கிறேன். அந்த பதவிக்கு ஒரு முட்டாளை தேடிப்பிடித்துவிட்டு ராஜினாமா செய்வேன். அதன் பின்னர் மென்பொருள், சர்வர் அணிகளை மட்டும் ஏற்று நடத்துவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு 2 மாதங்களாக சிஇஓ வாக செயல்பட்டு வருகிறார். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்கள் பணி நீக்கம் உட்பட அவர் எடுத்த பல முடிவுகள் உலகளவில் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பதவியில் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து நேற்று முன்தினம் கருத்துக் கணிப்பு நடத்தினார் எலான் மஸ்க். கருத்து கணிப்பில், 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் சிஇஓ பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எலான் மஸ்க்கை பின்தொடர்பவர்கள் கூறும்போது, ‘‘ரஷ்யா – உக்ரைன் போரை எவ்வாறு தீர்ப்பது என்று கூட ஏற்கெனவே கருத்து கணிப்பு நடத்தி உள்ளார். எனவே, சிஇஓ பதவிக்கு ஏற்கெனவே ஒருவரை தேர்வு செய்து விட்டு அவர் இந்த கருத்து கணிப்பை நடத்துவது போலவே தெரிகிறது’’ என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர் முன்னெடுத்த வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் அவர் பதவி விலக விருப்பம் தெரிவித்த நிலையில் ராஜினாமாவை அவர் உறுதி செய்துள்ளார். வாக்கெடுப்புக்கு முன்னரே பல்வேறு தருணங்களில் மஸ்க் தான் அளவுக்கு அதிகமாகவே பொறுப்புகளை சுமப்பதாகக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
I will resign as CEO as soon as I find someone foolish enough to take the job! After that, I will just run the software & servers teams.