கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் குமார், அங்குள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பையும், அமெரிக்காவின் கென்டக்கியில் அமைந்துள்ள எம்.எஸ். லூயிஸ்வில்லி பல்கலைக்கழகத்தில் எம்.எஸும், அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றுள்ளார். படித்து முடித்ததும் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட், இன்டெல் கார்ப்பரேஷன், ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். என்ன தான் வெளிநாட்டில் லட்சங்களில் சம்பளம் பெற்றாலும், பிறந்த தாய் நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார்.
இந்தியா திரும்பியதும் 2004ம் ஆண்டு கோவையில், ‘அமெக்ஸ் அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் காஸ்ட் அயர்ன் உற்பத்தி செய்து வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளம் தலைமுறையினர் வேலை வாய்ப்பு பெற்றுள்ள நிலையில், அசோக்குமாரின் கவனம் கல்வி பக்கம் திரும்பியது. முதன் முறையாக 2006ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டத்துடன் ‘இந்தியன் பப்ளிக் பள்ளி’ நிறுவினார். அதன் பின்னர் மாணவர்களுக்கு தொழில் ரீதியாக பயிற்சி அளிக்கக்கூடிய ‘தி டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.