வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வந்து போதைக்காக இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 385 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர், அன்னை இந்திரா நகர், 6வது தெருவில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக சிலர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ஷாலினிக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்த போது இருவர் வலி நிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்து சோதனை செய்தனர். போலீசாரால் செய்யப்பட்ட சோதனையில், இருவரிடமும் 385 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் கண்ணகி நகரை சேர்ந்த வினோத்(எ) அலி வினோத்(33), மற்றும் பழைய பெருங்களத்தூரை சேர்ந்த சபர்வாசன்(எ)புஜ்ஜி(21), என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகளை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
முறையான அனுமதில் இல்லாமல் வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பல இளைஞர்களுக்கு விற்று வந்த அந்த இருவர் மீதும் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசர் சிறையில் அடைத்தனர்.
தங்கள் பகுதியில் இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட மருந்துகள் விற்கப்பட்டது தெரிந்து அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். விரைவாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கும் இளைஞர்களின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.