பெங்களூரு: மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் “பவர் பாயின்ட்” மூலம் அரசின் திட்டங்களை எளிமையாக விளக்கி புரிய வைத்தது பத்திரிகையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கடந்த 18-ம் தேதி மாலை 6.33 மணிக்கு பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். 3 நிமிடம் தாமதத்துக்கு மன்னிப்பு கோரிவிட்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள ஆயத்தமானார்.
அப்போது பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அப்போது, அஷ்வினி வைஷ்ணவ் தனது மடி கணினியை திறந்து பவர் பாயின்ட் மூலம் ரயில்வே துறையின் திட்டங்களை விளக்க ஆரம்பித்தார். அவரது இந்த அணுகுமுறை பத்திரிகையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.
அமைச்சர் தொடர்ந்து பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச தரத்தில் நமது ரயில் நிலையங்கள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஒவ்வொரு ரயில் நிலையத்தின் வரைபடத்தையும் அவருக்கு காட்டி, அந்த டிசைனை அவர் ஏற்றுகொள்வதற்கு நிறையவே உழைக்க வேண்டியுள்ளது. அவரது ஒப்புதலின்படி டெல்லி, சென்னை எழும்பூர், மதுரை, பெங்களூரு கண்டோன்மென்ட், யஷ்வந்த்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. இந்த ரயில் நிலையங்களை விமான நிலையங்களைப் போல மாற்ற இருக்கிறோம். இந்த ரயில் நிலையங்களில் உணவு விடுதிகள், ஓய்வறைகள், குளிர்சாதன வசதி, லிஃப்ட் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெறவுள்ளன. 50 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நிலையங்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கும்.
அதே போல ரயில்களின் அமைப்பிலும் மோடி கவனமாக இருக்கிறார். அவரது தனிப்பட்ட வழிகாட்டுதலின்படியே வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப் பட்டன. இவ்வாறு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.