“உங்கள் வீட்டில் கூர்மையான ஆயுதம் வைத்துக் கொள்ளுங்கள்” – சாத்வி பிரக்யா தாக்கூர் அறிவுரையால் சர்ச்சை

ஷிவ்மோகா: “உங்கள் வீட்டில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள்” என்று இந்துக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் போபால் எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஷிவ்மோகாவில் நடந்த இந்து ஜாக்ரனா வேதிகே தெற்கு மண்டல வருடாந்திர கூட்டத்தில் பேசிய அவர், “ஒரு சன்யாசியின் புரிதலின்படி இந்த உலகில் பாவிகளையும், அடக்குமுறையாளர்களையும் அப்புறப்படுத்தும் வரை அன்பின் உண்மையான அர்த்தம் வாழாது. அதனால், லவ் ஜிகாத்தில் ஈடுபடுவர்களையும் பாவிகளைப் போலவே நடத்த வேண்டும்.

உங்கள் மகள்களை இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுஙகள். அவர்கள் மனதில் நற்பண்புகளை விதையுங்கள். அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஜிகாத் செய்கிறார்கள். அது அவர்களின் பாரம்பரியம். ஏதும் செய்ய முடியாவிட்டால் லவ் ஜிகாத் செய்கிறார்கள். இந்துக்களும்தான் அன்பு செய்கிறோம். ஒரு சன்யாசி இறைவனை அன்பு செய்கிறார். ஆனால் அவர்கள் அன்பிலும் ஜிகாத் செய்கிறார்கள்.

உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருங்கள். ஆயுதங்கள் இல்லாவிட்டால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். எப்போது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. எல்லோருக்கும் தற்காப்புக்கான உரிமை இருக்கிறது. ஆகையால், நம் வீட்டினுள் யாரேனும் அத்துமீறி ஊடுருவி தாக்கினால் அவர்களுக்கு நாம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

சாத்வி பிரக்யா சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போனவர் பலமுறை பல்வேறு கருத்துகளால் சர்ச்சையைக் கிளப்பியிருந்தாலும் மும்பை தாக்குதல் பற்றி இவரது கருத்து ஒன்று பெரும் எதிர்ப்பலைகளை சம்பாதித்தது. 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை எதிர்த்துப் போராடி சண்டையிட்டு அதில் வீர மரணம் அடைந்த தியாகி போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவின் மரணத்துக்கு தன் சாபமே காரணம் என்று அவர் கூறியிருந்தார்.

“இந்த ஹேமந்த் கர்காரேதான் என்னை தவறாக குற்றவாளியாக்கினார். நான் அப்போதே அவரிடம் கூறினேன், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று. அவரது பரம்பரையே அழிக்கப்படும் என்று சாபமிட்டேன், அதுதான் 26/11 தாக்குதலில் அவரது மரணத்திற்குக் காரணமாகும்” என்று அவர் பேசியது கடும் எதிர்ப்பை ஈட்டியது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.