புதுக்கட்சி தொடங்கினார் ஜனார்த்தன ரெட்டி – 2023 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தம்!

கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய சுரங்கத் தொழில் அதிபரான முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இது, பாஜகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் மிகவும் செல்வாக்கு வாய்ந்தவராக வலம் வருபவர், பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. பெல்லாரி பகுதியில் சுரங்கத் தொழிலில் பெரும் சாம்ராஜ்யத்தை அவர் நடத்தி வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மகளுக்கு, 650 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்து வைத்து, நாட்டையே திரும்பிப் பார்க்கச் செய்தவர். பாஜக மேலிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுடன், பெரும் பணபலம், சமூக வாரியான ஆதரவு இருப்பதால், கர்நாடக அரசியல் களத்தில், ஜனார்த்தன ரெட்டி தவிர்க்க முடியாதவராக உள்ளார்.

“ஜனார்த்தன ரெட்டியின் ஊழல்களை பாஜக ஆதரிக்கிறது” என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதால், கடந்த சில ஆண்டுகளாக பாஜக மேலிடத்துடன் இவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ‘தனக்கு கட்சியில் போதிய செல்வாக்கு இல்லை’ என, தனது சகாக்களிடம் நீண்ட நாட்களாகவே ஜனார்த்தன ரெட்டி கூறி வந்த நிலையில், இவரை சமாதானப்படுத்த, இவரது நண்பரும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான ஸ்ரீராமலு முயற்சித்தும் பயன் இல்லை.

இந்நிலையில், பாஜக உடனான தனது 20 ஆண்டு கால உறவை முறித்துக் கொண்ட ஜனார்த்தன ரெட்டி, ‘கல்யாண ராஜ்ய பிரகாதி பக்ஷா – கே.பி.பி.ஆர்’ என்ற தனிக்கட்சி தொடங்கி உள்ளார். இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நான் பாஜகவில் உறுப்பினராக இல்லை என்றும், அந்தக் கட்சிக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் பாஜக மேலிட தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், மாநில மக்கள் நான் இன்னும் பாஜகவில் இருப்பதாக நினைக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான், புதிய கட்சியை தொடங்கி உள்ளேன்.

மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரித்தாளும் அரசியலுக்கு எதிரான பசவண்ணரின் சிந்தனையுடன், கல்யாண ராஜ்ய பிரகாதி பக்ஷா என்ற கட்சியை துவங்கி உள்ளேன். எங்கள் கட்சி, 2023 பேரவைத் தேர்தலில் போட்டியிடும். விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்ப்பேன். நான் தொடங்கிய திட்டங்கள் என்றுமே தோல்வியை கண்டதில்லை.

தோல்வியை ஏற்றுக் கொள்ளாத சில நபர்களில் நானும் ஒருவன். மாநில மக்களின் ஆசியுடன் என் கட்சி வளர்ச்சி பெறும். எனது மனைவி, எனது அரசியல் பயணங்களுக்கு துணை நிற்பார். அடுத்த 10, 15 நாட்களில் கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அறிவிப்பேன். அப்போது சில வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. கொப்பல் மாவட்டத்தின் கங்காவதி தொகுதியில் நிற்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சி தொடங்கி இருப்பது ஆளும் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. காரணம், ஜனார்த்தன ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் பலர் பாஜகவில் இருப்பதால், விரைவில் அவர்கள், புதிய கட்சியில் சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.