மதர் டெய்ரி, அமுல் உள்ளிட்ட பல்வேறு பால் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பால் மற்றும் பால் பொருட்கள் விலையை உயர்த்தி வருகின்றன. பால் உற்பத்தி செலவுகள் அதிகரித்து வரும் சூழலில் பால் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரபல பால் நிறுவனமான மதர் டெய்ரி நிறுவனம் ஃபுல் கிரீம், டோன்டு, டபுள் டோன்டு ஆகிய பால் வகைகளின் விலையை உயர்த்தியுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.இதன்படி, ஃபுல் கிரீம் , டோன்டு , டபுள் டோன்டு ஆகிய வகை பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பால் விலை உயர்வு டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் மட்டுமே பொருந்தும்.
இத்துடன் இந்த ஆண்டில் மட்டும் ஐந்து முறை பால் விலையை உயர்த்தியுள்ளது மதர் டெய்ரி நிறுவனம். தற்போதைய விலை உயர்வின்படி, ஃபுல் கிரீம் பால் விலை 2 ரூபாய் அதிகரித்து 66 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டோன்டு பால் விலை 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 53 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டபுள் டோன்டு பால் விலை 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுகு வரும் என்றும், பசும் பால் மற்றும் பிற பால் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.