திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புறவழி சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதன் படி, ஏரிக்கோடி பகுதியில் இருந்து சண்டியூர் வரையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சுமார் மூன்று அடி அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஆனால், அந்த பள்ளங்கள் அனைத்தும் மூடாமல் உள்ளது
இந்நிலையில் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து நாட்றம்பள்ளி வழியாக குர்பானிகுண்டா கிராமத்திற்கு அரசு பேருந்து பயணிகளை ஏற்றி செல்லும். அதன் படி, நேற்று மாலை பேருந்து வழக்கம் போல் திருப்பத்தூரில் இருந்து நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்திற்கு வந்து, திரும்பவும் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது, பேருந்து ஏரிகோடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, நிலை தடுமாறி இடது பக்கத்தில் தோண்டப்பட்டுள்ள மழைநீர் பள்ளத்தில் இறங்க முற்பட்டது. உடனே பேருந்து ஓட்டுநர் திடீரென வலது பக்கம் திருப்பியுள்ளார். ஆனால், பேருந்து வலது பக்கம் இருந்த இரண்டு அடி பள்ளத்தில் சகதியில் மாட்டிக் கொண்டது. இதைப்பார்த்த பயணிகள் பேருந்தில் இருந்து அலறி அடித்து கொண்டு கீழே இறங்கினர்.
பேருந்து நின்றதால், எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. பின்னர் பயணிகள் செல்வதற்கு மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சென்றனர். இரவு நேரம் என்பதால் காலையில் பேருந்தை மீட்டுக் கொள்ளலாம் எனக்கூறி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தை அங்கேயே விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.