திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தை சேர்ந்த நேருதாசன் என்பவரின் மூத்த மகன் ஆகாஷ் (27) கைப்பந்து விளையாட்டு வீரர். தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.
இவர் கடந்த 21ஆம் தேதி நேபாள நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கலந்துகொள்ள சென்றிருந்தார்.
நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்ற போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்று அவர் ஓய்வு எடுக்க சென்றார். பின்னர் ஓய்வு அறையில் ரத்த வாந்தி எடுத்து மயக்கம் அடைந்த ஆகாஷை சக விளையாட்டு வீரர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சக விளையாட்டு வீரர்கள் ஆகாஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கைவண்டூர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆகாஷ் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி உரிய முறையில் விசாரணை நடத்தி அவரது உடலை பெற்று தருமாறு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கைவண்டூர் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
newstm.in