திருப்பதி : புகார்தாரர்களின் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று கூடுதல் எஸ்பி குலசேகர் தெரிவித்துள்ளார். திருப்பதி எஸ்பி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூடுதல் எஸ்பி குலசேகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:
எஸ்பி பரமேஸ்வர் உத்தரவின்பேரில், மக்கள் குறை தீர்வு நிகழ்ச்சி எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். மக்களின் பிரச்னைகளை சாதகமாக கேட்டறிய வேண்டும். ஒவ்வொரு வழக்குகளின் விவரங்களையும் கேட்டறிய வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்க வேண்டும். மக்களின் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் அனைத்தும் சட்டப்படி விசாரிக்கப்படும். புகார்தாரர்களின் பிரச்னைகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து தீர்வு காணப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.