மும்பையின் தென் பகுதியில் உள்ள தார்டுதேவ் பகுதியில் இம்பீரியல் என்ற கட்டடம் இருக்கிறது. இரண்டு கட்டடங்களை கொண்ட இந்த பில்டிங் 60 மாடிகளைக் கொண்டதாகும். நேற்று இரவு திடீரென இரண்டு ரஷ்யர்கள் படிக்கட்டு வழியாக ஒரு கட்டடத்துக்குள் நுழைந்துவிட்டனர். இரட்டை கட்டடத்தில் வெளிநாட்டு பிரஜைகள் இரண்டு பேர் திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கட்டடத்துக்குள் நுழைந்ததை கட்டடத்தின் வாட்ச்மேன் கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்துவிட்டார். உடனே இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் உடனே விரைந்து வந்தனர். அதற்குள் அவர்கள் 58-வது மாடி வரை ஏறிவிட்டனர்.

அதேசமயம் செக்யூரிட்டி கார்டுகள் தங்களைப் பார்த்துவிட்டதை உணர்ந்த இரண்டு பேரும், வேகமாக கீழே இறங்கி வந்தனர். போலீஸாரும் அவர்களைப் பிடிக்க மாடிக்கு வந்து கொண்டிருந்தனர். இரண்டு பேரும் 5-வது மாடிக்கு வந்தபோது அங்கிருந்து அவர்கள் வெளியில் இருந்த செயற்கை மலையில் குதித்துவிட்டனர். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இருவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்றும், யூடியூப் சேனல் நடத்துபவர்கள் என்றும் தெரியவந்தது.
அவர்கள் 60-வது மாடியிலிருந்து கட்டடத்தின் வெளிப்பகுதி வழியாக சாகசங்கள் செய்து அல்லது வெளிப்புறம் வழியாக கீழே இறங்கி அதனை வீடியோ எடுக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து இரண்டு பேரையும் கைதுசெய்த போலீஸார், அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து ரஷ்ய தூதரகத்துக்குத் தகவல் கொடுத்தனர். இரண்டு வெளிநாட்டுக்காரர்கள் கட்டடத்துக்குள் நுழைந்ததால் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டனரோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.