வரையாடுகளை காக்க சிறப்புத்திட்டம் -தமிழக அரசு இதையும் செய்தால் நன்றாக இருக்கும்!

உலகிலுள்ள பல பல்லுயிர் பெருக்க மண்டலங்களுள் முக்கியமானது மேற்குத்தொடர்ச்சி மலை. இந்தியாவின் உயிர்நாடியான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள், 1.6 லட்சம் சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு, தமிழகம், கேரளா, கர்நாடக, கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வரை பரந்துவிரிந்துள்ளன.

வரையாடு (Nilgiri Tahr)

இந்த மலைத்தொடரில், உலகில் வேறெங்கும் இல்லாத நீலகிரி வரையாடு (Nilgiri Tahr) தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் மட்டுமே உள்ளன. தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, கடல் மட்டத்தில் இருந்து, 1200 – 3000 மீட்டர் உயரத்திலுள்ள மலை முகடுகளில், புற்கள் நிறைந்த பகுதிகளில் வாழ்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், கோவை, நீலகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை, தேனி, கன்னியாகுமரி, களக்காடு முண்டந்துரை பகுதிகளில் மட்டுமே உள்ளன.

50 ஆண்டுகளுக்கு முன்பு வரையில், தொடர்ந்து அழிவின் பாதையில் பயணித்து அருகி வந்த வரையாடுகள், வனத்துறையினர் பல சட்டங்கள், முயற்சிகளால், வேட்டை, அச்சுறுத்தல்கள் குறைந்தது. இருந்தாலும், எண்ணிக்கை அருகியதால், International Union for Conservation of Nature (IUCN) அமைப்பின், ‘ரெட் லிஸ்ட்’ எனப்படும் அருகிவரும் காட்டுயிர்களின் பட்டியலிலும், வனத்துறையினர் பாதுகாக்கப்பட வேண்டிய காட்டுயிர்கள் பட்டியல் 1 (Schedule 1)ல் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி, பல ஆண்டுகளாக சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தமிழக அரசு இன்று, நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க பிரத்தியேக திட்டத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

நீலகிரி வரையாடு.

அரசு வெளியிட்டுள்ள அரசாணை…

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘‘தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளை காக்கவும், அதன் வாழிடங்களை மேம்படுத்தவும், இந்தியாவிலேயே முதல் முறையாக, ‘நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. 2022 – 2027 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு, வரையாடுகளை பாதுகாப்பதற்கான பணிகளுக்கு, 25.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரி வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பு காட்டுயிர்.

 ‘வரையாடு வருடையும் மடமான் மறியும் (சிலம்பு.வஞ்சி. காட்சிக்கதை: 51)’ மற்றும் ‘ஓங்கு மால்வரை வரையாடு உழக்கலின் உடைந்துரு பெருந்தேன் (சீவக.1559:1)’ என, தமிழில் ஐம்பெருங்காப்பியங்களான, சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணியில் வரையாடுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதிய அறிக்கை (WWF) 2015 கணக்கெடுப்பின் படி, 3,122 வரையாடுகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

வரையாடு

இத்திட்டத்தின் படி, பல உத்திகள் வாயிலாக, ஆண்டுக்கு இருமுறை கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங், பழைய வாழ்விடங்களில் மீண்டும் வரையாடுகளை அறிமுகம் செய்தல், சோலை புல்வெளிகளை சீரமைத்தல் என பல பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், ஆண்டுதோறும் அக்டோபர் 7–ம் தேதியை ‘வரையாடு தினம்’ ஆக கொண்டாடி அவற்றின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக தனியாக ‘நீலகிரி வரையாடு திட்ட’ இயக்குனர், துணை இயக்குனர் மற்றும், ஆனைமலை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்துார் – மேகமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்’’ என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை, சூழல் ஆர்வலர்கள், முன்னாள் வனத்துறை அதிகாரிகள் பாராட்டி வருவதுடன், தொடர்ந்து இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இது குறித்து, ஓய்வு பெற்ற வனக்கல்லுாரி இயக்குனர் மற்றும் கள இயக்குனருமான கணேசனிடம் பேசினோம். அவர் கூறுகையில், ‘‘மாநில விலங்காக அறிவித்த 1967-ம் ஆண்டுக்குப்பின் தான் வரையாடுகளை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கம் அதிகரித்தது. அதற்கு முந்தைய காலத்தில் அதீத வேட்டையின் காரணமாக வரையாடுகள் பெரும் அளவு குறைந்துவிட்டது. 1972-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டம் வந்தபின், வரையாடுகள் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியல் 1ல் சேர்க்கப்பட்டது.

வரையாடு

அதன்பின் தான், வேட்டைத்தடுப்பு காவல் முகாம், தொடர் கண்காணிப்பு, கடும் நடவடிக்கை என, வேட்டை தடுக்கப்பட்டு, அவற்றை பாதுகாப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணங்களால் மட்டுமே இன்றும் வரையாடுகள் உள்ளன. இந்த நிலையில், தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பின் வாயிலாக, இன்னும் தீவிரமாக வரையாடுகளை பாதுகாக்க முடியும்.

வரையாடுகளை இடமாற்றம் செய்து, வரையாடுகள் வாழத்தகுதியான மலைப்பகுதிகளில் அவற்றை விடுவித்து எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும். அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை களைந்தால் இன்னமும் எண்ணிக்கை அதிகரிக்கும். எந்த அரசு ஆட்சி செய்தாலும், தொடர்ந்து இதுபோன்ற திட்டங்களை பல ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச்சென்றால் மாற்றம் நிகழும்,’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.