கையோடு கை கோர்ப்போம்:
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தின் தொடர்ச்சியாக “அரசியலமைப்பை பாதுகாப்போம் – கையோடு கை கோர்ப்போம்” என்ற பரப்புரையை முன்னெடுப்பது சம்பந்தமாக கலந்தாலோசனை கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். இதில் மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், “ராகுல் காந்தியின் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமைப் பயணம் வரும் ஜனவரி 26-ம் தேதி காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நிறைவடைய இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அன்றைய நாள் முதல், `அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் கையோடு கை கோர்ப்போம்’ என்ற பரப்புரை இயக்கத்தை மாநில, மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம, வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.

வீடு வீடாகச் சென்று பிரசாரம்:
ஒவ்வொரு கிராமத்திலும் இந்திய ஒற்றுமைப் பயண நினைவு கல்வெட்டுடன் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து நடைப்பயணத்தைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். நடைப்பயணத்தில் ராகுல் காந்தியின் முக்கிய செய்திகளைத் தாங்கிய கடிதத்தை வீடு வீடாகச் சென்று விநியோகிக்க வேண்டும். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் உணர்ச்சிப்பூர்வமான காணொளிகளைத் திரையிட வேண்டும். இருசக்கர வாகன பேரணி நடத்தப்பட வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய அருண்குமார் என்ற பி.காம் பட்டதாரி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தால் அதிகரிக்கும் தற்கொலை:
இதுவரை ஆன்லைன் சூதாட்ட மோசடியால் ஏறக்குறைய 25 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அவலநிலையை முடிவுக்குக் கொண்டு வருகிற நோக்கத்தில் தான் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 19-ம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ம் தேதி அனுப்பப்பட்டது.
இதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி சட்டத்துறை அமைச்சர் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை ஒப்புதல் தராமல் மசோதாவை முடக்கி வைத்திருக்கிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இருக்கிறது. ஆனால், அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் முடக்கி வைப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.

ஆளுநருக்கு எதிராக கடுமையான போராட்டம்:
இது தமிழக மக்களின் நலனைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியதாகும். ஆன்லைன் சூதாட்டத்தினால் அருண்குமாரைப் போன்ற 25-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டதற்குத் தமிழக ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆன்லைன் சூதாட்ட மசோதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை முடக்கி வைத்திருக்கிற தமிழக ஆளுநருக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, “இன்று மாவட்ட தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. மொத்தம் 76 மாவட்ட தலைவர்களில் 66 மாவட்ட தலைவர்கள் வந்திருக்கிறார்கள். ஒரு சட்டமன்றத்துக்கு 100 காங்கிரஸ் கொடி ஏற்ற வேண்டும் என்பது இந்திய ஒற்றுமை பயணத்தின் அடிப்படையில் நடைபெறும் நிகழ்வு. நான் இதுவரை 11 மாவட்டங்களுக்கு நேரில் சென்று வந்திருக்கிறேன். மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த பணியைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

சமஸ்கிருதத்துக்கு ரூ.634 கோடி:
இந்த கூட்டத்தில் மக்களை வீடுகளுக்குச் சென்று சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். ஏற்கெனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கி.மீ தூரம் மாவட்ட தலைவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும். மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தவறு. கோவையில் பாஜக தலைவர் தமிழுக்கு நிறைய நிதி உதவி செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
ஏன் அவர் அதை திடீர் என்று சொல்கிறார் என எனக்குப் புரியவில்லை. நாட்டில் 6 செம்மொழிகள் இருக்கிறது. சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒரியா, கன்னடம். இதில் 5 மொழிகளுக்குக் கொடுத்ததை விட 22 மடங்கு அதிகமாகச் சமஸ்கிருதத்துக்குக் கொடுத்திருக்கிறார்கள். இந்த 5 மொழிகளுக்கும் ரூ.29 கோடி. ஆனால் சமஸ்கிருதத்துக்கு ரூ.634 கோடி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த நாட்டை சிதைக்க நினைக்கிறீர்கள்:
சமஸ்கிருதத்தை 21 ஆயிரம் பேர் மட்டுமே பேசுகிறார்கள். நீங்கள் கொடுக்காததைப் பற்றிக் கூட கவலை இல்லை. ஆனால் தமிழுக்கு அதிகம் கொடுத்திருக்கிறோம் என்று தமிழகத்தில் வந்து பேசுவது தவறான விஷயம். உங்களுக்கு ஒரு நாடு என்ற எண்ணம் இல்லை. கூட்டாட்சி தத்துவ எண்ணமே உங்களிடம் இல்லை. இந்த நாட்டை சிதைக்க நினைக்கிறீர்கள். அதற்கு நாங்களும், எங்களது கூட்டணிக் கட்சிகளும் அனுமதிக்க மாட்டோம்.
மோடியின் ஆட்சி முறை கூட்டாட்சி தத்துவத்திற்கு நேர் எதிராகச் செயல்படுகிற அரசாக இருக்கிறார்கள். தமிழக அரசு ஒப்பந்த ஆசிரியர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்” என்றார். பின்னர் ஆலோசனை கூட்டத்திற்கு மூத்த தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் முழுமையாக வரவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அழகிரி, “மாவட்ட தலைவர்கள் எப்போதும் முழுமையாக வருவதில்லை.

பிரஸ் மீட் தேவையில்லை:
பலராமனுக்கு 80 வயது ஆகிறது. ஜெயக்குமார் எம்.பிக்கு 73 வயது ஆகிறது. அவர்களைப் பார்க்கும் போது உங்களுக்கு கை குழந்தை போல் தெரிகிறார்களா?. நானே பல நிகழ்ச்சிக்கு வருவதில்லை. அப்படி அவர்கள் வராமல் இருப்பார்கள். காங்கிரஸில் யார் வருகிறார்கள் யார் வரவில்லை என்பதில் பிரச்னை இல்லை. அதற்கு பதில் சொல்வதற்காகவா பிரஸ் மீட்? தேவையில்லை” என்று கோபமாக சென்று விட்டார். முன்னதாக மாவட்ட தலைவர்களுக்கு கமகம பிரியாணி விருந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.