சீனாவில் ருத்ர தாண்டவமாடும் கொரோனா; உலக சுகாதார அமைப்பு கவலை!

சீனாவில், கொரோனா வைரஸ் தொற்றின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, சுகாதாரத் துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய பரவலுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வகை தொற்றால், அடுத்த மூன்று மாதங்களில், சீனாவின் மக்கள் தொகையில், சுமார் 60 சதவீதம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபமெடுத்து உள்ளது, இந்தியா உட்பட உலக நாடுகளை கதி கலங்கச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

‘இனி கொரோனா பாதிப்புகளை வெளியிட போவதில்லை’ – சீனா அதிரடி!

சீனா கொரோனா பரவல் குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:

சீனாவில் கொரோனா பரவலின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளது. சீனாவில் தொற்று பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. எனினும், தொற்று நோய் நிலைமை குறித்து விளக்க சீனா இன்னும் முன்வர வேண்டும்.

சீனாவில் தற்போதைய தொற்று பரவல் பற்றிய விரிவான தகவல்கள் எங்களுக்கு தேவை. கண்காணிக்கவும், அதிக ஆபத்துள்ளவர்களுக்கு தடுப்பூசி போடவும் சீனாவை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். மருத்துவ பராமரிப்பு மற்றும் அதன் சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதற்கான எங்கள் ஆதரவை நாங்கள் சீனாவுக்கு தொடர்ந்து வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.