ஹரியானா மாநிலம், குருக்ஷேத்ராவில் உள்ள பெஹோவாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அமைச்சர் சந்தீப் சிங். இவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில், அவர்மீது தடகள பயிற்சியாளரான பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய தேசிய லோக் தளத்தின் (INLD) அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தினர். அப்போது, “அமைச்சர் சந்தீப் சிங் என்னை உடற்பயிற்சி கூடத்தில் சந்தித்தார். அதன்பிறகு என்னுடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, என்னை சந்திக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார்.
மேலும் எனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும், இது தொடர்பாக சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். இதற்கிடையில், எனது சான்றிதழ் எனது கூட்டமைப்பினால் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த தகவலை எடுத்துச் சென்றேன். மேலும், என்னிடம் இருந்த வேறு சில ஆவணங்களுடன் அமைச்சரின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்தில் அவரை சந்திக்க ஒப்புக்கொண்டடேன். அங்கு சென்றபோதுதான், அமைச்சர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

எனவே, மனோகர் லால் கட்டார் அரசு சந்தீப் சிங்கை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அமைச்சர் சந்தீப் சிங் இந்தக் குற்றசாட்டை மறுத்து அந்தப் பெண்ணையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.