சென்னை: “அன்புமணி ராமதாஸ் நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த 1998-ல் அதிமுகவுடன் கூட்டணி வந்த பிறகு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா 5 சீட் கொடுத்தார். அந்த 5 இடங்களில் 4-ல் வெற்றி பெற்றனர். இதனால்தான் அந்தக் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது. இல்லையென்றால் அங்கீகாரம் கிடைத்திருக்குமா?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜன.2) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக நான்காக உடைந்திருக்கிறது என்று பேசியிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒருபக்கம் வருத்தமும் வேதனையும் அளித்தது. இன்னொரு பக்கம் கடுமையான கண்டனத்தை நாங்கள் தெரிவித்தோம். பாமகவை ஏற்றி வைத்த ஏணி அதிமுக. அதிமுகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுன் இல்லையென்றால், பாமக என்ற கட்சியே வெளியே தெரிந்திருக்காது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூட்டணிக்கு அழைத்ததால்தான் அந்தக் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்குமுன் அந்தக் கட்சிக்கு அங்கீகாரமே கிடையாது. கடந்த 1991-ம் ஆண்டு தேர்தலில் பாமக எத்தனை இடங்களில் வென்றது? சட்டமன்றத்தில் ஒரு இடத்தைப் பெற்றது. அதன்பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். ஒரு இடத்திலாவது வெல்ல முடிந்ததா? ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
எனவே, அன்புமணி ராமதாஸ் நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த 1998-ல் அதிமுகவுடன் கூட்டணி வந்தபிறகு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா 5 சீட் கொடுத்தார். அந்த 5 இடங்களில் 4-ல் வெற்றி பெற்றனர். இதனால்தான் அந்தக் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது. இல்லையென்றால் அங்கீகாரம் கிடைத்திருக்குமா?
எனவே, நன்றியை மறந்து அன்புமணி ராமதாஸ் பேசினால், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, அவரது பக்கத்தில் இருக்கும் தொண்டர்கூட அவரை மன்னிக்கமாட்டார்.
2001 சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு அதிமுக கூட்டணியில் 27 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் பாமக 20 இடங்களில் வென்றது. யாருடைய தயவால் வெற்றி பெற்றீர்கள். பாமக தயவால் அதிமுக வரவில்லை. அதிமுக தயவால் பாமக வென்றது. அதிமுக தயவால்தான் பாமக சட்டமன்றத்தினுள் வந்தது. நாடாளுமன்றத்துக்குள் சென்றது. அதிமுக தயவால்தான் அன்புமணி மத்திய அமைச்சரானார்.
பலம் வாய்ந்த அதிமுகவைப் பார்த்து சிறுமைப்படுத்தும் விதமாக அன்புமணி பேசுவதால், அதிமுக சிறுமைப்பட்டு விடுமா? யாராலும் அதிமுகவை சிறுமைப்படுத்த முடியாது. அன்புமணி இன்று எம்பியாக இருக்கிறார். அதை யார் தந்தது? அதிமுகதான் அவரை எம்பியாக அடையாளம் காட்டியது.
இதையெல்லாம் மறந்துவிட்டு, அன்புமணி அதிமுக நான்காக உடைந்திருக்கிறது என்பது போன்ற கருத்துகளைக் கூறி, அதிமுகவை சிறுமைப்படுத்தும் வேலைகளில் எதிர்காலத்தில் ஈடுபட வேண்டாம். அதையும் மீறி சீண்டினால், அதற்கு தக்க பதிலடியை நாங்களும் கொடுப்போம்” என்றார் ஜெயக்குமார்.
முன்னதாக புதுச்சேரி அருகே நடந்த பாமக, புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் சில கட்சிகள் விளம்பர அரசியல் செய்துவருகிறார்கள். ஒரு கட்சி என்ன செய்கிறது என்பதை செய்தியை பார்த்துதான் தெரியவருகிறது. ஒருவர் வாட்ச் காட்டுகிறார். ஒருவர் அடுக்குமொழியில் பேசுகிறார். நமக்கு தெரிந்தது வளர்ச்சி அரசியல். நமக்கான அங்கீகாரம் வரும். தமிழக மக்களுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை. களம் நன்றாக உள்லது. அதிமுக நான்காக உடைந்துள்ளது. திமுக மீது பலமான விமர்சனம் உள்ளது. மற்ற கட்சிகளின் சத்தம் மட்டுமே ஒலிக்கிறது” என்று பேசியிருந்தார்.