ஹரியானாவை சேர்ந்த ஒருவர், கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து தன் மனைவியுடன் இணைந்திருக்கிறார். இதுதான் தன் வாழ்வின் மிகச்சிறந்த தருணம் என்று நெகிழ்ந்தும் இருக்கிறார் அவர்.
ஹரியானாவை சேர்ந்த கேஹர் சிங் (55) என்பவரின் மனைவி தர்ஷினி (50) என்பவர், கடந்த 2013-ம் ஆண்டு காணாமல் போயுள்ளார். அப்போது அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். அதன்பேரில் உ.பி, டெல்லி, பஞ்சாப் என பல மாநிலங்களில் அவர் தேடப்பட்டு வந்திருக்கிறார்.
இருப்பினும் அவர் கண்டறியப்படாததால், அவர் குடும்பத்தினருக்கே அவர் மீண்டும் கிடைப்பாரென்று நம்பிக்கை இல்லாமல் போயுள்ளார். இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் கொடகு என்ற பகுதியில் உள்ள ஒரு தன்னார்வ அமைப்பின் ஆதரவு இல்லத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அங்குதான் அவர் கடந்த 4 வருடங்களாக இருப்பதும் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த இல்லத்தை சேர்ந்தவர்கள், அவரை குடும்பத்தினருடன் இணைத்துள்ளனர்.
இத்தனை வருடங்களாக தர்ஷினி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் அவருக்கு தன் சொந்த ஊர் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். உரிய சிகிச்சைக்குப்பின்னர் தற்போது அது தெரியவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தர்ஷினி 2013-லேயே காணாமல் போன போதிலும், 2018-ல் தான் அவர் இந்த இல்லத்துக்கு சென்றிருப்பதாக தன்னார்வ அமைப்பின் ஆதரவு இல்லத்தில் இணைந்திருக்கிறார் என தெரிகிறது. அந்த இல்லத்தை சேர்ந்தவர்கள், அருகிலிருந்த காவல்துறையினர் உதவியுடன் தற்போது தர்ஷினியை அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், “தர்ஷினியின் மனநிலைக்கு சிகிச்சைகள் அளித்தோம். அதன்பேரில் கடந்த 6 மாதங்களுக்கு முன் அவர் கொஞ்சம் முன்னேற தொடங்கினார். அவருடைய சொந்த ஊர் பற்றி தெரிவித்தார். அதன்பேரில் நாங்கள் ஹரியானா மாநில காவல்துறையினரிடம் பேசினோம். அவர்கள், தங்கள்வசமிருந்த காணாமல் போனாவர்கள் பட்டியலை ஆய்வு செய்தனர். அதன்பேரிலேயே அவர் குடும்பத்தினரை கண்டுபிடித்தோம்” என்றுள்ளார்.
தர்ஷினியின் கணவர், தனது மனைவி மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றார். உள்ளூர் மீடியாக்களிடம் அவர், “முஸ்தஃபாவிடம் இருந்து (அந்த தன்னார்வ அமைப்பை நடத்துபவர் பெயர், மொஹமது முஸ்தஃபா) அழைப்பு வந்ததுதான், என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு” என்று மகிழ்வுடன் தெரிவித்திருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
