இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.. யார் இந்த சாவித்திரிபாய் பூலே? அப்படி என்ன செய்தார்?

சமூக சீர்த்திருத்தவாதியும், பெண் கல்வியை முன்னெடுத்தவருமான “சாவித்திரிபாய் பூலே”வின் பிறந்ததினம் இன்று. இவர் பெற்ற மிகப்பெரிய சிறப்பே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பதுதான். பெரும்பாலோனோருக்கு இவரது வரலாற்று பங்களிப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் நைகோன் கிராமத்தில் 1831 ஆம் ஆண்டு ஜனவரி 3ல் பிறந்தவர் சாவித்திரிபாய் புலே. அந்த காலத்தில் குழந்தை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நாட்டில் இயல்பாக இருந்து வந்தது. சாவித்திரிபாய் 9 வயதாக இருக்கும்போது, ஜோதிராவ் புலேவை திருமணம் செய்து கொண்டார். சமூக சீர்திருத்தவாதியாக பின்னால் உருவெடுக்க ஜோதிராவ் புலேவுக்கு அப்போது வயது 13.
image
தொடக்கத்தில் சாவித்திரிபாய்க்கு, ஜோதிராவ் கல்வி கற்றுக் கொடுத்தார். தாழ்த்தப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்கான பள்ளியை இந்த தம்பதி 1847இல் தொடங்கியது. பின்னர், 1848இல் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை நாட்டிலே முதன்முறையாக புனேவில் உள்ள பீடே வாடு பகுதியில் தொடங்கினர். 9 பெண் பிள்ளைகளுடன் தொடக்கப்பட்ட அந்த பள்ளிக்கு சாவித்திரிபாய்தான் பொறுப்பு ஏற்று கல்வி கற்றுக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக அவர் ஆனார்.
சமூகத்தில் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வியை கொண்டு செல்லும் பணியில் சாவித்திரிபாய் தன்னுடைய வாழ்நாளை செலவிட்டார். அந்த காலத்தில் இத்தகைய பணியை மேற்கொள்வது அவ்வளவு எளிதல்ல. குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே அன்று கல்வி பெற அனுமதிக்கப்பட்டது. மற்றவர்கள் கல்வி பெறுவது மறுக்கப்பட்டது. அப்படிபட்ட காலத்தில் பெண்களுக்கு கல்வியை கொண்டு சென்றால் எதிர்ப்பு எழாமலா இருந்திருக்கும்.
ஆம், பள்ளிக்கு சாவித்திரிபாய் செல்லும் வழியில் அவர் மீது சேற்றையும், சாணத்தையும், மண்ணையும் மாறி மாறி வீசுவார்களாம். இதனை தன்னுடைய கணவர் ஜோதிராவிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?. மற்று ஆடையை தினமும் எடுத்துச் செல். பள்ளிக்கு சென்றதும் அதனை மாற்றிக் கொண்டு பாடம் நடத்து என்று அவர் அறிவுரை கூறியுள்ளார். அதன்படி, பள்ளிக்குச் செல்லும் போது இரண்டு புடவைகளை அவர் எடுத்துச் சென்றார். பெண் சிசு கொலைக்கு எதிர்ப்பு, விதவை திருமணம், சாதி ஒழிப்பு என பல்வேறு சீர்திருத்த பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டார். அதற்காக இலக்கியங்களையும் அவர் படைத்தார்.
சாவித்திரிபாய் பூலே பிறந்தநாளில் அவர் கல்வியில் செய்த சேவைகளை நாம் போற்றுவோம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.