முதல்வர் ஸ்பாட் உத்தரவு; கலங்கி கிடக்கும் காவல் துறை!

தமிழ்நாட்டில் போதை பொருட்கள் நடமாட்டம் மற்றும் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆனாலும் கஞ்சா, பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஒவ்வொரு பகுதியிலும் சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், போலீசார் போதை பொருட்கள் நடமாட்டம் மற்றும் பயன்பாட்டை குறைப்பது தமிழக போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அவ்வப்போது இத்தகைய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும், மீண்டும் மீண்டும் போதை பொருட்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக முதல்வர்

தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதற்கொண்டு போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளையும் பிறப்பித்து இருந்தார்.

ஆனாலும் போதை பொருட்கள் விற்பனை இன்னும் சில பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்றபடி தான் உள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தார்.

அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது‘போதை பொருட்களை கட்டுப்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுத்து வந்தாலும் இது போதாது. இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுங்கள்’ என, கேட்டுக் கொண்டார்.

மேலும் ‘போதை பொருள் பயன்பாட்டின் ஆபத்து பற்றி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 11ம் தேதியை போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்து உள்ளோம்.

அதன்படி பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’ என கூறி இருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த இந்த உத்தரவு எதிரொலியாக போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், விற்பவர்களை பிடித்து குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வந்தனர்.

இந்த சூழலில் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் கிலோ கணக்கில் கோகைகன் போதை பொருள் சிக்கியதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இலங்கையில் இருந்து சர்வதேச போதை பொருட்கள் கடத்தல் தாதா கஞ்சிபாணி இம்ரான் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி உள்ளதாகவும் ராமேசுவரத்துக்கு கள்ளத்தோணியில் தப்பி வந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து கடலோர பகுதிகள் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா, போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மருத்துவத் துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், பள்ளி கல்வி துறை செயலாளர் காகர்லா உஷா, உயர் கல்வி துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மை செயலாளர் கன்சோங்கம் ஜடக்சிரு மற்றும் உளவு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதுமட்டுமல் இல்லாமல் கடலோர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் ஐ.ஜிக்கள் காணொலி காட்சி மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு துறை அதிகாரிகளுடன் விரிவாக பேசினார்.

அப்போது, ‘தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி போதை பொருட்கள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். போதை பொருள் கடத்தல்காரர்களை கண்டுபிடித்து கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.